என்னை யாரென்று நினைத்தீர்கள்?
_______________________________________________
ருத்ரா
என்னை யாரென்று நினைத்தீர்கள்?
தமிழ்ப்பேச்சில் புலி.
கம்பராமாயணத்து ரசத்திலிருந்து
பட்டிமன்ற அடுப்பு மூட்டி
தர்க்கவியல் குழம்பு வைப்பேன்.
வாலி சுக்ரீவன் வால்களை முடிச்சுப்போட்டு
தமிழுக்கும் சடை பின்னுவேன்.
மார்க்சிய தாடியையும்
பெரியார் கைத்தடியையும்
வினோதமாய் கொலுவைப்பேன்.
ஆரியத்தின் சவப்பெட்டிக்கு
திராவிட ஆணி ஆடிக்க
அண்ணா கலைஞர் கைவசம் இருக்கும்
அருமையான தமிழ்ச் சம்மட்டிகளையும்
லாவகமாய் கையாளுவேன்.
சாமியார்களில் எத்தனை பேர்கள்
இருக்கிறார்களோ
அவர்களில் மாங்கொட்டை சித்தரிலிருந்து
மடி பேசும் மடத்தலைவர்கள் உட்பட
தன்னை மைக்கேல் ஜாக்சன்
என்று நினைத்துக்கொண்டு
தாடி மயிர் கூட தாண்டவம் ஆடும்
டாலர் குருஜிக்கள் வரை
மனம் தழைய தழைய
சொற்கள் குளிர குளிர ஆனால்
தமிழ்ச்சுடர் தீப்பொறி தெறிக்க
பேட்டிகள் எடுப்பேன்.
சொற்பெருக்குகள் ஆற்றுவேன்.
என் பன்முகம் உங்களுக்கு புரியும் போது
இன்னும் புரிந்து கொள்ளுவீர்கள்
என் தமிழ் உளிப்பட்டு ஒலிக்கும்போது
இந்த உலகத்தின் இமைகள்
ஒரு ஒளிச்சிற்பத்தின்
வியப்பால் விரிகின்றன என்று
வாழ்க தமிழ்.வெல்க தமிழ்.
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக