திங்கள், 21 ஆகஸ்ட், 2023

கல்யாண்ஜி எனும் சன்னல் தமிழ்.

 கல்யாண்ஜி எனும் சன்னல் தமிழ்.

_____________________________________


ஆம்.

காற்று ஜிவ்வென்று அடிக்கிறது.

ஏதோ அதில் சின்ன சின்ன

தூசி துரும்பு கூட‌

கலித்தொகையின் குருட்டுமூலைக்கு

கண்ணாடி மாட்டிவிடுகிறது.

அந்த ஒலைச்சுவடியின்

தமிழ் நம் கற்பனையை

ஒரு பளிச் மின்னலால் குருடாக்கி விடுகிறது.

கல்யாண்ஜி அவர்களே

உங்கள் சாளரத்தில்

எல்லா பிரபஞ்சங்களும் 

சாதா மண்ணுளிப்பாம்புகள் போல்

வந்து

நக்கிக்காட்டி ருசி காட்டிவிடுகிறதே.

உங்கள் சொற்களில்

எங்க கல்லிடைக்குறிச்சி மணிமுத்தாறு

அணைக்கட்டுகள் போல‌

ஆயிரம் ஆயிரமாய் கல்லடுக்கி

அடைத்து வைத்திருக்கும்

புழுக்கங்களின் இனிய இலக்கியத்தின்

ஒப்பற்ற சுவை கொண்டது.

விநாடிக்கு விநாடி ஓவ்வொரு கவிதை வீதம்

நீங்கள் பிரசவித்துக்கொண்டே 

இருக்கவேண்டும்.

நம் கன்னித்தமிழுக்கு

நம் வரலாற்றின் கன்னிக்குடம் உடைக்க‌

நேரமே வர வில்லை போலும்.

கல்லுக்கு உண்டக்கட்டியை காட்டி

பசியாற்றும் மந்திரங்களே

நம்மை மடக்கிப்போட்டு உட்கார்ந்து

பத்மாசனம் செய்து கொண்டிருக்கிறது.

உங்கள் கவிதை

எப்போதும் ஒரு குகையை

திறந்து வைத்துக்கொண்டே இருக்கிறது.

வாழ்க!வாழ்க! கல்யாண்ஜி அவர்களே!

நீடூழி நீடூழி நீங்கள் வாழ்க!


______________________________________________________‍

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக