என்னடா பொல்லாத வாழ்க்கை?
____________________________________________________________
ருத்ரா
என்னடா பொல்லாத வாழ்க்கை?
ஒரு சினிமாப்பாட்டு
இப்படித்தான் தோலுரித்தது.
நம் போலித்தனத்தை.
சமுதாயத்தின் மீது நாம்
காட்டும் கயமைத்தனத்தை.
சாதி மதத்தீ நம் இதயங்களையே
கருக்கிவிட பரவிவிட்ட போதும்
கண்டுகொள்ளாமல் கிடக்கும் நம்
கையாலாகத்தனத்தை.
அறச்சீற்றம் அறவே அற்ற
நம் மரத்துப்போன
பொம்மைத்தனத்தை.
கண்ணெதிரே அரங்கேறும்
கொடுமைகளை மூடிப்போர்த்தும்
மூடகங்களான ஊடகங்களின்
மூளித்தனத்தை.
எண்ணிக்கை எனும்
நாற்காலிக்காடுகளை
நந்தவனமாக செட்டிங்க்
அமைத்த மாயையில்
அம்பத்தொன்று என்பதே
பெரும்பூதமாய் ஆகி
ஜனநாயக்கணக்கையே
விழுங்கி தின்று தீர்க்கும்
அவலம் நடப்பதன்
சூழ்ச்சித்தனத்தை
புரிந்து கொள்ள வலுவற்றுப்போன
வாக்காளர்களின்
மொக்கைத்தனத்தை.
என்னடா பொல்லாத வாழ்கை
என்று
நீட்டி முழக்குகிறது
அந்தப் பாட்டு.
உன்மத்தம் பிடித்து
உறைந்து கிடந்தது போதும் மக்களே!
உறக்கம் உதறுங்கள்.
உடைத்து நொறுக்கப்போகும்
உங்கள் விலங்குகளை
ஒரு முறை உற்றுப்பாருங்கள்.
வாசல் தெரியும்.
வழியும் தெரியும்.
______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக