செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

நம் கலைஞர்

 



நம் கலைஞர்

______________________________

சொற்கீரன்.



பெயர் மாற்றிக்கொண்ட‌

"பரிதிமாற்கலைஞரை"

அந்த பெயரின் தமிழ் வெளிச்சத்தை

தன் மீது எப்போதும்

சந்தனமாக பூசிக்கொண்டவர் 

நம் கலைஞர்.

சினிமா வசனம் என்ற‌

உரைக்காடுகளில்

பூ பூவாய் பூத்துக்கிளர்ந்து

தமிழ் இலக்கியத்தை சிகரம் ஏற்றினார்.

சமுதாயக்கனலின்

ஒரு சமத்துவ ஏக்கத்தை

மண்ணைக்குவித்து ஆசனமாக்கி

உயர்த்திக்கொண்டு 

சினிமா பார்க்கிற அந்த‌

கிராமத்து சிம்னி விளக்குகளுக்குள்

சூரியப்பிழம்பு ஆக்கினார்.

சங்கத்தமிழின் ஓலைச்சுவடிக்குள்ளிருந்து

தொல் தமிழின் "ஃபாசில்"செதில்களை வைத்து

தமிழனின் வரலாற்றுப்படுகையில்

சிவப்புக்கம்பளம் விரித்தார்.

உலகமே உற்றுப்பார்த்தது.

ஏன்

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய‌

அந்த ராட்சத பல்லி இனங்களின்

உறுமல்களுக்குள்ளும்  செருமல்களுக்குள்ளூம்

அகநானூற்றுக் கலித்தொகைகளின்

ஊடல் கூடல் ஒலிப்பிஞ்சுகள் 

நமக்கு கேட்பதாக அல்லவா

இவர் பேனா நம்மை நிமிர வைத்திருக்கிறது.

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி

அவரை அவரே முகம்பார்த்துக்கொள்ள‌

எழுதிய கண்ணாடி பதிப்பு அல்ல.

மூன்று கால தோலுரிப்பில்

தமிழனின் காலம் வெல்லும்

வெற்றிப்பட்டையங்களின் கதிர்ப்பிளிறல்

முழக்கமிடும் வைரப்பதிப்புகள் அவை.

எச்சரிக்கை கொள் தமிழா!

இந்த வர்ணப்பேய்கள்

அய்யன் வள்ளுவனையும்

ஏதோ ஒரு அத்ரி ரிஷியாக்கி

வர்ணம் பூசி ஆபாசப்படுத்திவிடும்

அபாயம் இங்கு

ஆலவட்டம் போடுவதை

தமிழா உணர்ந்து கொள்.

அவர் விட்டுப்போன மூச்சுக்காற்றைப்

பிளந்து பார்

தமிழின் நெருப்புப்புயல் 

கனன்று கொண்டிருப்பதை ஒரு ஓர்மையுடன்

உற்று நோக்குவாய்.

கலைஞர் எனும் 

எழுத்துக்குள் கோடி நூலகங்கள்

கால் கோள் விழா நடத்திக்கொண்டிருக்கின்றன.

கலைஞரின் சிந்தனைச்சிதறலிலிருந்து

நாம் உறுதியாக சேமித்து விடுவோம்

நம் "சிந்து வெளி"களை.

கலர் வளைய கனவுக்குள்

வீழ்ந்து படாமல்

நாம் விழித்து நிற்போம்.

பிடிப்புடன் நிற்போம்

அந்த சூரிய விழுதுகளே

நம் கலஞர்!


________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக