வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

மோகன் என்றொரு கலைஞர்

 


மோகன் என்றொரு கலைஞர்

______________________________________________

ருத்ரா



துணைநடிகர் திரு மோகன் அவர்கள்

திருப்பரங்குன்றத்தில் காலமானார்

என்ற ஒரு வரிச்செய்தி

அப்படியே தேய்ந்து போய்விடலாம்.

இவர் கமலஹாசனோடு நடித்தவராமே

என்று

கமலஹாசனின் அரிதாரத்தோடு

யாராவது ஒருவர்

ரோஜாமாலையோடு வரலாம்.

அந்தக்கலைஞரின் சடலத்தின் மீது

உள்ள சில ஈக்கள் ஒன்று கூடி

கண்ணீர் அஞ்சலிக்கவிதை கூட‌

வாசிக்கலாம்.

இவர் மட்டும் அல்ல.

அல்வா வாசு என்று ஒருவர்

வடிவேலு காமெடியை

அடிக்கடி விசையேற்றி மெருகேற்றித்

தந்தவர்.

அவர் கல்லீரல் கல்லாய் கட்டி தட்டிப்போனதில்

மூச்சை உதிர்த்து சென்றவர்.

கோடி ரூபாய்களின் சூரிய வெளிச்சத்தை

தாங்கி உலாவரும் நடிகர்களின்

உலகுக்குள்

இப்படி சில குட்டி உலகங்கள்

முகவரியற்ற விட்டில்களால் ஈசல்களால்

நிரம்பிக்கிடக்கின்றன‌

என்பது 

இந்த மனித சமுதாயத்தின் 

நெஞ்சையே பிழிகின்ற அவலங்கள் தான்.

இதை உற்று நோக்கும் 

கண்களும் நெஞ்சங்களும்

இல்லாத நம் கந்தல் சமுதாயத்தைப்பற்றி

என்ன சொல்ல இருக்கிறது?

ஒரு அரசாங்கம் இலவசங்களைக்கொண்டு

கொஞ்சம் ஓட்டை உடைசல்களின்

நெழிசல்களை எடுத்து பொருளாதார சமப்பாடு

நோக்கி முயல்வது 

ஒரு இமாலயப்பணி தான்.

இத்தகைய நெஞ்சு நொறுங்கும் 

அவலங்களுக்கும் 

அது ஏதாவது செய்யவேண்டும்.

வெல்ஃபேர் ஸ்டேட் என்று 

ஆங்கிலப்பொருளாதார சொல் ஒன்று

உண்டு.

தமிழில் பாட்டாக பாடினால்

"கண்ணீர் சிந்தாதே! கவலை கொள்ளாதே

கண் போல நானுன்னை எந்நாளும் காப்பேன்"

என்பதே அது.

கண்டு கொள்ளப்படாத மனிதர்கள்

நெஞ்சிலும்

கண்டு கொள்ளப்பட வேண்டிய 

சித்தாந்தக்கனலும் கனவும் உண்டு.

மனித நேயம் என்ற பேரண்டக்

கதிர்விரிப்பே நம்

ஓட்டு எந்திரங்களுக்குள்

வெள்ளம் ஆக பாய்ந்திடவேண்டும்.

மோகன் போன்ற‌

மனித தீவுகள் நோக்கியும்

அன்பின் அலைகள் 

ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும்.

இந்த வெட்டிக்கவிதையை

குப்பையில் போடு.

ஆம் 

குப்பையில் தான் போட வேண்டும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அந்த குப்பை சேகரிக்கும்

இளம்புயல்கள் என்றைக்காவது

இமைகள் உயர்த்தும் என்று.


_______________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக