நுனிக்கொம்பர் ஏறி அஃதிறந்து ஊக்கின்...
__________________________________________________
ருத்ரா
அரசமரத்து பிள்ளையாரிடம் போய்
தலையில் குட்டிக்கொண்டு
வலம் வந்து வந்து கிடைத்த சீட் இது.
அப்புறமும்
மூளக்குள் மொண்ணையுரு தட்டி
பரீட்சைகளில் மார்க்குகளை குவித்து
அப்புறமும் தேர்வுகள்
மற்றும் சிபாரிசுகளில்
இந்த இடத்தில் வந்து நான் இருக்கிறேன்.
என்னிடம் போய்
மனிதனைப்பார்
மனித நேயத்தைப்பார்
சமூக சமத்துவத்தைச்சிந்தி என்று
எதற்கு இந்த சொற்குவிப்புக்கள்.
எப்படியோ
எதற்கோ
ஒரு நிலைக்கு வந்துவிட்டேன்.
என் திறமை என் திறமை என்று
எக்காளம் ஊதிக்கொண்டிருப்பதே
என் வர்ணம்.
என்னை நான் தீட்டிக்கொண்டிருப்பதே
என் வாழ்க்கை.
வேண்டுமானால்
கடவுள்களையும் மந்திரங்களையும்
பக்கத்தில் வைத்துக்கொண்டு
பந்தல் இட்டு தோரணங்கள் கட்டிக்கொள்வேன்.
ஒரு பறவைக்கூடு போல்
என் பங்களா இருக்கிறது என்று
ஆனந்தப்பட்டுக்கொள்வேன்.
கண்ணாடிப்பளபளப்புகளில்
ஏதோ ஒரு சிங்கப்பூர் ஆர்க்கிடெக்ட் வந்து
கட்டிக்கொடுத்ததாய்
புளகாங்கிதப்பட்டுக்கொள்வேன்.
ஆனாலும் அப்படித்தான்
ஒரு நாள்
சும்மா இருக்க மாட்டாமல்
ஒரு ஆங்கிலப்புத்தகம் ஒன்றைப்படித்துவிட்டேன்.
எக்ஸிஸ்டென்சியலிசம்
என்று ஒரு சொற்கூட்டின்
லேசர் பிழம்பை என் சிந்தனைக்குள்
ஊற்றிவிட்டது அந்த புத்தகம்.
இந்த மண்ணின் வேர் மனிதனா?
அவன் சிந்தனையா?
அவன் தான் இருக்கிறான்
அவன் மட்டுமே இருக்கிறான்.
அவன் போன்ற கோடி கோடி
செதில்களில்
இங்கு எல்லாம் செதுக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு ஆற்றலின் திரவம்
அவனில் இருந்து ஊற்றெடுக்கிறது.
ஏதோ போகிற போக்கில்
வேர்வை என்று சொல்லப்படுகிறது.
மனிதம் என்று ஒரு பொறி
கிளர்ந்து இனிய அன்பெனும் உள்ளர்த்தம்
உணரும்போது தான்
மனிதத்தின் "இருப்பும்"
உணரப்படுகிறது என்று
அந்த ஜீன் பால் சார்டரின் புத்தகம்
எனக்கு தோலுரித்துக் காட்டியது.
மனிதம் அதன் அர்த்தத்தைப்புரிந்து கொள்ள
சமுதாயக்களம் நிச்சயம் தேவை
என்கிறார்.
மார்க்சிய கொடியை ஓவென்று
அவர் அகலமாக விரித்துப்பிடிக்காத போதும்
வாழ்கையில் மனிதனுக்கு
எந்த அர்த்தமும் இல்லை என்று
புலம்பும் "நிகிலிசம்"
அவரிடம் இல்லை.
எனக்கு ஒரு குவிமையம் இருக்கிறது என்று
கண்டுபிடித்து விட்டேன்.
மக்களின் தேவைகள் எனும் கூர்மை
விடுதலை வட்டத்தில் தான் விழுகிறது.
கடவுளின் மாயக்கற்பனைகள்
பாறாங்கல்லாய் சமுதாயத்தின் அந்த
மொத்த மூச்சுப்பிழம்பை
நசுக்கக்கூடாது.
நான் புல்லின் முனைகளை
கால்விரல்களில் சிக்க வைத்துக்கொண்டு
அடிவயிற்றின் எதோ ஒரு எரிமலையின்
அரிய அந்த பச்சைவெளியை
மனதில் பருகிக்கொண்டு நடைபயிற்சி
செய்கிறேன்.
என் இருப்பு சமுதாயத்தின் உள் நெருப்பா?
தெரியவில்லை.
செதுக்கி செதுக்கி நடந்து கொண்டிருக்கிறேன்.
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக