சனி, 29 ஜூலை, 2023

உன் பொருள்திணிவு என்ன?

 உன் பொருள்திணிவு என்ன?

_____________________________________

ருத்ரா



உன் பொருள்திணிவு என்ன?

புரியவில்லையா?

உன் வாழ்க்கையின் "அர்த்தம்" என்ன‌

என்று 

கேட்டால் தானே புரிகிறது உனக்கு.

புரிந்து அல்லது புரியாமல் 

இருப்பதில் எல்லாம்

ஒன்றும் நிகழ்ந்து விடப்பொவதில்லை.

ஏனெனில் 

புரிந்து கொள் இந்த முரண்பாடுகளை

என்று இந்த சமுதாய அவலங்கள்

சாதிகளையும் மதங்களையும் கொண்டு

உன்னை செய்யாத வதங்களா?

கை நீட்டிக்காட்டும் காரணங்கள்

உன்னை காக்காய்முட்களாய்

கிழிசல்கள் ஆக்கியிருப்பதும்

உனக்கு தெரியாமலா இருக்கிறது?

நகைச்சுவை மேதை வடிவேலு சொல்வது போல்

எத்தனை அடித்தாலும் தாங்குகிறாண்டா இவன்

என்று 

அந்த கடவுள்களே உனக்கு

தோப்புக்கரணம் போட்டுவிட்டு

ஓடுவதைத்தான் பார்க்கிறோம்.

மனிதா

உன் பொருள்திணிவு அறி.

உன் ஆற்றலின் கதிரியக்கம் உணர்.

ஒட்டு மொத்தமாய் உன்னுள்

சிக்மண்ட் ஃப்ராய்ட் இனம் கண்ட‌

அடி நீரோட்டம்

பன்னீர் ஓடைகள் அல்ல.

அந்த துண்டுப்பீடியை வலித்துவிட்டு

அந்த சளியையும் 

காறி உமிழும்போது

நீ பார்த்திருப்பாய் அந்த நிலத்தடியின்

ரத்த சிவப்பு அணுக்கள்

அடையாளம் காட்டுவதை.

உழைப்பின் வேர்வை எனும்

சதுப்புக்காட்டில்

நீ மட்டும் புதைந்து போகவோ

இந்த விண்முட்டும் கண்ணாடிக்கட்டிடங்கள்

கண் சிமிட்டிக்கொண்டு நிற்கின்றன?

ஆம் 

புயல் பூசி எழுத்துக்கூட்டித்தந்த‌

சமுதாய சிற்பிகளின்

அந்த சிந்தனைகள்

உன்னை சிலிர்க்கச்செய்யும்.

அப்போது உன் பொருள் திணிவு

உனக்கு புரிந்து போகும்.


__________________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக