நான் எனக்குள்ளே...
___________________________________________
சொற்கீரன்
நான் எனக்குள்ளே
ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சி ஆட்டம்
ஆடுவதற்கு பெயரே
மன சாட்சி என்பது.
நான் மிக மிக வசதியான
பத்திரமான
உயரத்தில் இருக்கும்போது
அந்த சிவனோடு ஒன்றாகி விடுவேன்.
அவன் புலித்தோல் கூட
என் மூக்குத்துடைக்கும்
கைக்குட்டை தான்.
முரண்பாடுகளின் பூகம்பத்தால்
நான் நொறுங்கிக்கிடக்கும்போது
எனக்கு இந்த உலகத்தையே
சம்மட்டியால்
அடித்து நொறுக்கத்தோன்றும்.
அடுத்தவனை அடித்து சாப்பிட்டு
பசியாற்றிக்கொள்வதே
என் நீதியாய் இருக்கும்.
அந்த இறைவமும் இந்த புழு பூச்சியும்
ஒன்று என்ற
தத்துவம் எல்லாம் எங்கோ
எகிறிகிடக்கும்.
மதமும் கடவுளும்
மாறி மாறி முகமூடிகள் போட்டுக்கொண்டு
என்னை
புலி வேஷம் அல்லது எலிவேஷம் போட்டு
ஆடச்சொல்லி கிளர்ச்சி ஊட்டும்.
நான்
எதிலிருந்து
எந்த அடிப்படை உணர்விலிருந்து
இப்படி உருண்டு திரண்டு வந்து
சாமி ஆடிக்கொண்டிருக்கிறேன்
என்பது
எப்போது பொறி தட்டி காண்பிக்குமோ
எப்போது
என் மில்லியன் ஆண்டுகளின் வரலாறுகள்
என் மூளைக்குள்
மூளைக்குள் மூளையாக..மூளைக்குள் மூளையாக
குமிழிகள் விட
விடுதலை செய்யப்படுமோ
அப்போது வெடிக்கும் பெருவெளிச்சமே
மனிதம் எனும் பிழம்பிற்கு ஒரு பிக் பேங்க்.
அறிவியல்
அந்த அதிசயத்தை எட்டுகிறது என்பதில்
ஐயம் இல்லை.
ஆனால் கூடவே வருகின்ற
தன்னிலைப்பற்று அல்லது ஒரு லாப இன்ஸ்டிங்க்ட்
இன்னும் இன்னும் இதை
ஒரு கார்ப்பரேட் அண்டமாகத்தான்
விரிவடையச்செய்து கொண்டிருக்கிறது..
இந்த முரண்பாடுகளின் முரண்பாட்டு முட்டை
எப்போது உடையும்?
கேள்வி காத்திருக்கிறது.
பாவம் அதற்கும் தெரியாது
கேள்விகள் உடைந்தாலும் அவையும்
கேள்விகளே என்று!
__________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக