ஞாயிறு, 2 ஜூலை, 2023

ஒரு தேன்மழை.

 


ஒழுங்கின்மைக்குள் ஒரு வெள்ளியருவி.

_____________________________________________

சேயோன்.



என்ட்ரோபி எனும்

ஆங்கிலச்சொல் என்னுள்

நுழைந்து வதைத்துக்கொண்டே

இருக்கிறது.

அலப்பறைகள்.

அங்கிங்கெனாத படி எங்கும்

சிதறல்களாய்

இறைந்து கிடக்கும் அந்த‌

சல்லிகளைப்பொறுக்கி எடுத்து

சரித்திரம் சமைக்கப்படும்.

பிறப்பின் சுவைக்குள்ளேயே

மிகவும் இனிப்பு என்று 

சப்புக்கொட்டவைக்கும்

இறப்புகள்.

அதுவே காதலின் நிமிண்டல்கள்.

இது வருடிக்கொடுக்காத 

இதயங்கள் இங்கு

எங்கும் இல்லை.

பாருங்கள் இன்று..

விண்வெளியின் இயற்பியல் கோட்பாடுகள்

ஒவ்வொன்றாய் நொறுங்கிக்கொண்டிருக்கின்றன.

ஜேம்ஸ் வெப் சன்னல் வழியே

ஈடன் தோட்டங்களில்

அறிவின் நிர்வாணம் மூடப்படுகிறது.

கல்லறைகளை தோண்டியெடுங்கள்

உங்கள் வருங்கால கருவறைகள் 

அதில் தான் என்று கெக்கொலி காட்டி

சப்பாணிகொட்டி 

சிரிக்கிறது அந்த அசுரத்தொலைநோக்கி.

கருந்துளைக்குள் தான்

எல்லா அண்டமும் பிண்டமும் என்று

அதோ..அதோ

என் வீட்டுச்சன்னல்கம்பிகள் வழியே

பிதுங்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்த கடவுள்களின் கண்ணாமுட்டைகள் கூட‌

வீங்கி புடைக்கிறது.

வேத வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம்

திகிலில்

மூத்திரம் விட்டுக்கொண்டிருக்கிறது.

போகட்டும்.

எனக்குள் என் பட்டாம்பூச்சிகள்

பட்டாணிக்கடலையை சுடசுட வறுத்துக்

கொடுத்துக்கொண்டிருக்கிறது.

என் காதல் அதிர்வுகள்

அந்த கண்ணாடிச்சிறகுகளில்

ஙொர்ர்ர்ரென்று

தட்டாம்பூச்சிகளாய்

கிளுகிளுப்பு காட்டிக்கொண்டிருக்கிறது.

அவள் 

இந்த அண்டத்தில் எங்கோ

ஒரு ப்ராக்ஸிமா எக்ஸொபிளானட்டில்

முறுவல் காட்டுகிறாள்.

என்ட்ரோபி ஒரு தேன்மழை.


______________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக