சொட்டு சொட்டாய் ...
__________________________________________
சொட்டு சொட்டாய் உதிர்கிறது
நம்பிக்கையும்
அவ நம்பிக்கையும்.
ராமர் கோயில் பளிங்குத்தூண்களை
புடைத்துக்கொண்டு நிற்கிறது.
உள் நிழல்
புல் முளைத்து நின்ற
அந்த பழைய கட்டிடத்தை அல்லவா
காட்டுகிறது.
ஒரு கிரவுஞ்ச வதத்தின்
கண்ணீர் நெருப்பு தாளாமல்
வந்த இதிஹாசத்துள்
துயரக்கடல் அலையடிப்பது
எந்த வசிஷ்டரின் ஞானக்கண்ணுக்குள்ளும்
அடைபடவில்லையே.
அடுத்த ஆட்சிக்கு இப்போதே
கட்டிடம் தயார் என்று
ஹோமக்குண்டங்கள் போல்
காத்திருக்கும் மண்டபத்துள்ளே
ஜனநாயகமே கருகி
அந்த ஆகுதியின் நெய்த்தீக்கொளுந்துகள்
ஆகாசம் வரை நாக்கு நீட்டி
சப்பு கொட்டிகொண்டிருக்கிறதே.
எதிர்ப்புக்குரல்கள்
கை கோர்த்து பலமாய்
மனித சங்கிலியாய் மறித்தபோதும்
சில பல ஊடகப்பிசாசுகள்
பேய்ச்சிரிப்புகள் செய்கின்றனவே என்றும்
நடுநிலையாக
லேபிள் ஒட்டிய எந்திரங்கள்
இடறி நின்று
கோரத்தனமாய்
கோரைப்பற்களை
கடகடத்துக்கொண்டு நிற்கின்றனவே என்றும்
மாமூல் கணினிகளுக்குள்
மாயாபஜார் திரைப்படங்கள்
மாமூலாய் ஓட்டப்பட்டு விடுமோ என்றும்
கவலைகள் மொய்க்காமல் இல்லை.
ஒரு பொய்யை
ஆயிரம் அல்ல கோடி அல்ல
பில்லியன் பில்லியன் தடவைகள்
லைக்குகளாய் மாற்றி
குழப்பியடிக்கும்
குறுக்கு வழிகள் எங்களிடம்
எத்தனையோ எத்தனையோ என்று
மார் தட்டும் மாஃபியா மல்லர்களின்
சூழ்ச்சி சித்தாந்தங்கள்
சூதுகள் புரிகின்றன.
கிரேக்கத்து ட்ரோஜான் மரக்குதிரைகள் போல்
இந்தக்குதிரை பேரங்கள்
அஸ்வமேத யாகங்களின் ஊர்வலமாய்
உலா வருகின்றன.
சர்வாதிகாரத்தையே ஜனநாயகம் போல்
உருட்டும் "மணி லாண்டரிங்"
நாடகங்களும் அரங்கேறுகின்றன.
மதமும் சாதியும்
வஞ்சகச் சூறாவளியாய் வீசும்போது
தேர்தல் வரப்பு ஓரங்களின்
வெள்ளைச்சிறு பூக்கள்
சிதறிப்போகுமா?
சீற்றம் கொள்ளுமா?
காத்திருப்போம்.
வெற்றி நமதே.
__________________________________________
செங்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக