செங்கோடி.
___________________________________
தம்பி...
நீ இல்லாமல் நான்
தவித்து தான் போனேன்.
எண்பது முடிந்தது என்று
தோரணம் கட்டி
எனக்கு விழா எடுத்தார்கள்.
நீ
ஓடி ஆடி நின்று
ஆள் அம்புகளாய் பரபரத்து
முறுவல்கள் தூவி கல கலப்பு
ஊட்டுவாயே.
அந்த வெறுமை வலிக்கத்தான் செய்கிறது.
இப்போது என் அகராதியில்
அந்த கல்லிடைக்குறிச்சி என்னும்
கவிதை கந்தலாகி
மண்ணுக்குள் கிடக்கிறது.
தாமிரபரணியும் கன்னடியன் கால்வாயும்
தன் பச்சை மரகத பளிங்கு விரிப்பை
தினமும் பாய்போல்
விரித்து சுருட்டி மடக்கி
மீண்டும்
சுருட்டி விரித்து மடக்கி
நமக்கு
வாழ்க்கையின் பசும்புல் பனித்துளிகளை
மாலையாக கோர்த்து தந்து
களிப்பூட்டியது தான்
இன்னும் இன்னும் நினைவுக்குளியலாய்
இருக்கிறது.
நம் சொத்து
இந்த நினைவுகள் மட்டுமே.
தம்பி நீ
என் கனவு அல்ல.
என் நனவு அல்ல.
நிழலும் அல்ல.
நிஜமும் அல்ல.
இந்த காலத்தின் குமிழிகள்
நம்மை ஏமாற்றமுடியாது.
நீ நான் என்ற இலக்கண பிம்பங்கள்
உடைந்த
அன்பின் உள்ளுணர்வு மட்டுமே
இப்போது நம்மிடம்.
அன்புடன் உன் அண்ணன்
இசக்கி பரமசிவன்.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக