வியாழன், 13 ஜூலை, 2023

கவிப்பேரரசு அவர்களே..

 


கவிப்பேரரசு அவர்களே..

_______________________________________

சொற்கீரன்




கவிப்பேரரசு அவர்களே..

கந்தலாகிக்கிடந்த தமிழை

இந்த இலக்கிய உலகத்திற்கே

ஒரு ரத்தினக்கம்பளமாக்கி

விரித்து வைத்தீர்களே

அதில் தமிழின் காலடிகளில்

சிலம்புகள் உடைத்த பரல்கள்

இருந்தன

இமயங்களாய் உலகத்துச் சிகரங்களாய்.

எத்தனை பாடல்கள் தெறித்தன!

"இது ஒரு பொன்மாலைப் பொழுது"

என்று

வானத்தை உருக்கி உருக்கி

வார்த்தீர்களே ஒரு பாடல்.

ஒவ்வொரு சொல்லும்

அகாடெமி அவார்டு விருதுகளைப்

பூத்து சிரிக்கும்.

அப்புறம் அந்த‌

சின்ன சின்ன ஆசை..

சின்ன சின்ன ஆசையா அது?

கற்பனைப்பிரளயத்தின்

ஆயிரம் ஆயிரம் 

பிரபஞ்சங்களை அல்லவா

கண்ணாடி வளையல்கள் போல்

குலுங்கி குலுங்கி சொல் உடைசல்களில்

வண்ணங்கள் விரிக்கின்றீர்கள்.

உங்கள் பாட்டுக்குவியல்களில்

நீங்களே தனியாய் கிசு கிசுத்த

அகநானூறுகள்

"மணி மிடை பவளங்களாய்"

எழில் பெருக்கின.

ஆங்கிலக்கவிஞர்களான

ஷெல்லியும் கீட்சும் 

உங்கள் கவிதைக்குள்

உட்கார்ந்து உங்கள் கவிதைகளையே

படித்துக்கொண்டிருப்பதாய்

ஒரு பிரமிப்பு எனக்கு ஏற்பட்டதுண்டு.

டி எஸ் எலியட் கவிதைகளை

துண்டு துண்டாய் உடைத்துப்பார்த்தால்

அந்த உருவகங்கள் சிம்னி விளக்குகளாய்

வானப்பரப்புக்குள் 

ஒளி நாற்றுகளாய் ஒலி வீச்சுகளோடு

அசைந்து கொண்டிருக்கும்.

அது போல் 

உங்கள் பேனாவின் 

குகைக்குள்ளும் 

மனித நம்பிக்கைக்கள்

இனிமையாய் உறுமிக்கொண்டிருக்கும்.

உங்களின்

கவிதைத்துண்டுகள் அத்தனையும் 

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு

எழுத வேண்டிய கருப்பொருளை

கரு உயிர்த்து கன்னிக்குடம் உடைக்கக்

காத்திருக்கும்.

பேப்லோ நெருதாவின் 

பேனச்சுவடுகள் 

மின்னல் பொறிகளின் 

மைல் கற்களாய்

உங்கள் எழுத்துக்களில் 

நட்டு நிற்கும்.

அது 

ஒரு செம்புயல் சுவாசத்தின்

கலைடோஸ்கோப் கனவுகளை

உருட்டி உருட்டி 

உணர்ச்சித்தீ மூட்டும்.

வாழ்க! வாழ்க!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே!

நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!


____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக