புதிய மகிழ்ச்சி..
____________________________________
ருத்ரா
என்ன தான் நடக்கிறது?
யாருக்கு என்ன கவலை?
மனக்கவலை மாற்றல் அரிது
அதனால்
மனங்களையெல்லாம்
நிரப்பி வையுங்கள்
வெறும் மண்ணால்
புழுதிக்குப்பைகளால்
மனத்துள் மூளையிருக்கிறதா?
மூளைக்குள் மனம் இருக்கிறதா?
கல்லுக்குள் கடவுளா?
கடவுளுக்குள் கல்லா?
வேதாந்த சித்தாந்தங்கள்
தினம் தினம் சோறாய் ஆக்கி
தின்னப்படுகிறது.
ஒன்றுமே இல்லாத மாயை
என்று
திரையாட்டமும் நடக்கிறது.
எதற்கு இந்த
பிறப்பும் இறப்பும்?
சுடுகாட்டுச்சாம்பல் துகள்கள்
உடுக்கை அடிக்கிறது.
தலைவிரி கோலமாய்
அச்ச நிழல் காட்டி
ஆவேசம் கொள்கிறது.
அறிவின் அணுக்கதிர்கள்
அண்டத்தையே
அங்குலம் அங்குலமாய்
சுரங்கம் வெட்டுகிறது.
கீழ் நோக்கியா?
மேல் நோக்கியா?
கற்பனையின் கூர்நகங்கள்
அழகாய் வண்ணப்பூச்சு
செய்து கொள்கின்றன.
ஆனால்
நகங்களில் எல்லாம்
குடலும் ரத்தமும் தான்.
மனிதனைத்தின்னும் வெறி
மனிதனின் தோள்மீதே
உட்கார்ந்து கொண்டு
தோரணங்கள் கட்டுகிறது.
அடுக்கு அடுக்காய்
மனித சவங்களின் குவியல்.
சாதிகள் எனும் பேய்வெறி
எல்லாவற்றையும் தின்னுகிறது.
"பிணம் தின்னும் சாத்திரங்களில்"
என்ன உயிர் இருக்கும்?
என்ன ஒளி இருக்கும்?
ஆம்.
எதுவும் இல்லை.
இருட்டு இருட்டு இருட்டு
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
நசுங்கிக்கூழாகிப்போய் விட்டன.
அதோ ஒரு புல்லின் கீற்று.
சிவப்புப்புல்.
மலை முகட்டில்
கடல் பரப்பில்
மண் துளியில்..
அறிவுக்குள் ஒரு
அறிவு
ரத்தம் பாய்ச்சுகிறது.
சத்தம் கேட்கிறது.
முரசுகளை அதிரவிடுங்கள்.
முடங்கிக்கிடக்கவா
இத்தனை இத்தனை கோடிகள்?
செவிப்பறைகள் கிழிந்தன.
நத்தைகள் ஊர்ந்து கொண்டிருக்கிறன.
காலம் இறந்ததென்று
காலமே ஒப்பாரிகள் வைத்துக்கொள்ளட்டும்.
புதிய நேனோ செகண்டுகளில்
பனித்துளிகள்
கருவுயித்துக்கொள்ளட்டும்.
அந்த புதிய முகத்தின் புன்முறுவல்..
எல்லாவற்றையும்
புரிய வைக்கிறது.
மகிழ்ச்சி..எங்கும் மகிழ்ச்சி..
மகிழ்ச்சியைத்தவிர
வேறு எதுவும் இல்லை.
____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக