வெள்ளி, 28 ஜூலை, 2023

வெள்ளிவீதி

 வெள்ளிவீதி

____________________________________________


நான் நடந்தேன்.

காலடியில் இலைச்சருகுகள்

மட்டுமே 

பேசிக்கொண்டு வந்தன.

அன்று வெள்ளிவீதி என்றொரு

பெண்

சிந்திய கண்ணீர் இன்றும்

அந்த சருகுகளில் உருகி உருகி வழிந்தன.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப்

பின்னும் அதன் தமிழ் ஈரம்

ஓராயிரம் எரிமலைத்தாகத்தை

புதைத்து வைத்திருந்தது

எனக்குள் நரம்புகளை

நெருப்பின் யாழ் ஆக்கி விட்டது.

"கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:

அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?

உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? 

நற்றிணைப்பாடல் 348ல் 

அந்த வெள்ளிவீதி 

தன் காதலின் பிரிவுத்துயம் தன்னை

எவ்வளவு கந்தலாக்கி கிழித்துக்கொண்டிருக்கிறது

என்று பாடுகிறாள்.

அவன் எங்கோ வானில் ஒரு விடிவெள்ளியாய்

இருந்து அவளை அழைக்கிறான்.

இவளோ அவனை தன்

விரலால் கூட வருடி மகிழ முடியவில்லை.

எங்கோ ஒரு வீதியில் இருக்கிறாள்.

அவள் கேள்வி ஒன்று இங்கே

சுட்டெரிக்கிறது.

இந்த உலகம் என்னோடு போரிடுகிறதா?

இல்லை 

நான் இந்த உலகுடன் போர் புரிகின்றேனா?

நண்பர்களே

இது காதலின் துயரம் மட்டும் அல்ல.

மனித வாழ்க்கையின் துயரம் கூட‌

இப்படியொரு போர் தான்.

கண்ணுக்குத்தெரியாத அந்த சமுதாயத்தின்

காக்காய்முட்கள் 

ஏற்படுத்தும் மனப்புண்கள்

சங்கத்தமிழில் "கார்ட்டூன் சித்திரங்களாய்"

இலங்குகின்றன என்பது என் எண்ணம்.


____________________________________________

ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக