ஞாயிறு, 30 ஜூலை, 2023

கல்லிடைக்குறிச்சியின் ரயிலே!

 



கல்லிடைக்குறிச்சியின் ரயிலே!

அந்த தண்டவாளங்களில்

அம்பதுகளின் ஒலிக்காவியங்களிலிருந்து

நான் 

மெல்ல எழுந்து நடக்கிறேன்.

இரு பக்கமும்

பனங்குட்டிகள் அணிவகுக்க

ஊடே சில தூங்குமூஞ்சி மரங்களும்

அந்த பஞ்சுப்பூக்களை ஊதி விட‌

நீ

இரும்புச்சக்கரங்களை கொலுசுகள் ஆக்கி

ஓடி ஓடி முன் செல்லும் 

அந்த அழகுக் காட்சி

சொன்னால் கோடி பெறும் 

சொல்லாவிட்டாலோ

சொல்லு சொல்லு என்று

ஊறும் ஆர்வமோ 

இன்னும் இன்னும் கோடி பெறும்.

தாமிரபரணியின் பாலத்தில்

நீ நகரும்போது

கீழே பச்சைப்பளிங்கின் நீர் சுழிப்புகள்

ந‌ம் தமிழ் மூச்சின்

எட்டுத்தொகை பத்துப்பாட்டாய்

அலைவிரித்து எழில் விரிக்கும்.

என் அருமை ரயிலே!

என் ஊரின் இதய ஒலிகளை 

மீட்டிக்கொண்டே தான் செல்கிறாய்.

நானும் 

உன்னைப்பார்த்துக்கொண்டே

உன்னுடனேயே ஓடி வருகிறேன்.


____________________________________________

கவிஞர் ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக