இன்று ஒரு கனவு
_____________________________________
ருத்ரா
இன்று
எனக்கு தூக்கம் வருமா?
மாத்திரைகளை பல்லாங்குழி
ஆடிக்கொண்டிருக்கிறோம்
தினமும்.
சிந்தனைகள் அடித்து அடித்து
துவைத்து
டிங்கரிங் செய்யப்பட்ட பின்
தலையணையோரங்களில்
நங்கூரம் பாய்ச்சுகிறோம்.
தூங்கினால் தான்
கற்பனைப்பிழியல்களின்
பஞ்சு வனங்களாய்
நுரை விரிப்புகளாய்
கனவுகள் குமிழியிடும்.
அப்படி என்ன குமிழி வேண்டும்
உனக்கு?
நாளை என்ற சொல்
நிகழவே நிகழாது என்று
தெரிந்தே
இந்த சொல்லில் தான்
தினமும் பயணம்.
காலத்தை முன்னும் பின்னுமாய்
மேலும் கீழுமாய்
நம் கைக்குள் இடியாப்பச்சிக்கல்களை
அளைந்து கொண்டு
விளையாட
ஒரு குமிழியின் குட்டி உலகம்
வேண்டும்.
எதுவும் நடக்கலாம்.
ஸ்பேஸ் டைம் வார்ப் என்று
விஞ்ஞானிகள் அதோ
விண்வெளியையே
சுருட்டி மடக்க கணித சமன்பாடுகளை
முடைந்து கொண்டிருக்கிறார்கள்.
கனவுக்குள் நனவும்
நனவே கனவாகவும்
ஹோமரின் ஓடிசியையும்
நம்மூர் விக்கிரமாதித்தன் வேதாளத்தின்
கதையையும்
பதியம் செய்து பதிவிட்டு
படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நம் மனத்தையும் அறிவையும்
கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு
ஒரு வெர்ச்சுவல் போன்சாய் மரத்தை
நம் மடியில்
வைத்துக்கொண்டு
வெயிலுக்கேற்ற நிழலுண்டு
என்று இனிய கவிதை
பாடலாம் வாருங்கள்.
__________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக