சனி, 29 ஜூலை, 2023

புழு

 புழு

_____________________________________________

ருத்ரா


சாதி வேண்டாம் என்று

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

நமக்குள் ஒரு குரல் கேட்கிறது.

ஆனாலும் அந்த 

மந்திரக்கூச்சல்கள் நம் மீது

வரட்டிகள் கொண்டு மூடுகின்றன.

அந்த கூச்சல்கள்

மலைப்பாம்புகளாய் நம்மைச்

சுற்றிக்கிடக்கின்றன.

தமிழா...நீ இனி

மனிதா மனிதா என்று தான்

கூப்பிடப்பட‌வேண்டும்.

தமிழா என்ற சொல் 

எப்போதோ கூர்மை மழுங்கிப்போனது.

புரியாத சத்தங்களில் 

புல்லரித்து புல்லரித்து நீ

புழுதிக்காட்டில் 

புரண்டு கொண்டிருக்கிறாய்.

அந்த சாதி மிருகம் அந்தப்புதர்களில்

இருந்து கொண்டுதான்

உன் மாமிசத்தை தின்னப் பாய்கிறது.

உன் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

உன் காதலையும் வேலையும் ஈட்டியையும் தானே

கூர் தீட்டுகிறது.

அந்தத் தமிழ்ச்சொல் ஒவ்வொன்றும் 

சிக்கி முக்கிக்கல் தான்.

அதிலிருந்து தெறிக்கும் பொறிகள்

உன் முன் வரலாற்றின் முனைப்பு

எதுவென்று உனக்குள் தீ மூட்ட வில்லையே.

புரியாத மந்திரங்களில் 

இன்னொருவனை வைத்து நீ புலம்பித்தீர்ப்பதில்

என்ன 

புதிய வானம் ஒன்றைக் கண்டாய்?

என்ன வெளிச்சத்தை நீ உண்டு நின்றாய்?

இருட்டுக்குள்ளேயே

ஒரு இருட்டை சமைத்துத்தின்று

நெளிந்து கிடக்கும் அற்பப்புழுவாய்

இன்னும்

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு

ஊறிக்கிடப்பாய்?

இந்த நாற்றங்களிலிருந்து

உன் நாகரிக நெருப்பின் 

புயல் என்றைக்காவது வீசாதா?

பார்க்கலாம்...தமிழா!

இல்லை இல்லை

மங்கியே கிடக்கும் மனிதா!


______________________________________________________










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக