கொறிக்க கொடு..
============================================ருத்ரா இ பரமசிவன்.
எதையாவது எழுது.
படிப்பவன் விலா எலும்பை
உடைத்து முறுக்க
எழுத்துக்களின்
"கோணா மாணாவுக்குள் நுழை"
அட ! அப்படியா!
என்று வாய் "ஸிப்பை"
எப்படியாவது கிழித்து விடு.
அது கலக்கல் காமெடி ஆகிவிடும்.
இன்னும்
வயிற்றைக்கலக்க
ஏதாவது
குட்டிச்சுவர்
கக்கூஸ் சுவர் காவியங்களை
தெளி.
என்னத்தையோ கொறிக்க கொடு.
கடலை போடுவதிலிருந்து
கடலை தாவுவது வரை
ஏதாவது
பொட்டுக் கடலையை சிதற விடு!
ராசி பலன்கள்..
சாதி சூத்திரக்கயிறுகளைக் கொண்டு
முடிச்சு போடும் கல்யாண மாலைகள்...
கும்பாபிஷேக ஃ போட்டோக்கள்..
புற்றீசல் கூட்டங்களின் பூஜை புண்ணிய அளப்புகள் ....
தனியுடமைத்தினவுகளுக்கான
நகாசு விளம்பரங்கள்...
வீட்டு மனைகள் ..காட்டு பங்களாக்கள்..
தனிமைத்தருணங்களை
மத்தாப்பு கொளுத்திய
மதர்ப்பான நிகழ்வுகள்..
இன்னும் இன்னும்..
புருடா கருடா பொறம்போக்கு புராணங்கள்...
மறைமுகமாய் சப்பைக்கட்டும்
அரசியல் அசிங்கங்கள்..
மசாலா தடவிய
நடிகர் நடிகைகள் பற்றிய கிசு கிசுப்புகள்..
அந்த
பஞ்ச் டயலாக் காரர்களின்
பஞ்சாங்க பேச்சுக்கள்...
அதுவே
வைர(ல்) எழுத்துக்கள்.
நோய் பரவட்டும்.
மண்ணாகக் கிடந்தவன் மனசு
பல் முளைத்து
அரைக்க ஆரம்பித்து விடட்டும்
அது போதும்
எப்போதும்
"பெட்" ஆகி அவன்
உன் மடியிலேயே
சடையை சட சடத்துக்கொண்டிருக்க.
"வாஷிங் பவுடர்"களிலிருந்து
"ஃ பேஷன் லோஷன்"கள் வரைக்கும்
விளம்பரத்து மோப்பங்களை மேயவிட்டு
"பாப் அப்" சன்னல்கள் மூலம்
பொருளாதார மூலங்களின்
முலைப்பாலை உறிஞ்சிக்கொள்ள
அவை போதும்.
அதோ அங்கே..
அசை போட்டு சவைக்க காத்திருக்கின்றன
அந்த தவிட்டுக்கும்
மாட்டுப்புண்ணாக்குகளுக்கும்!
==================================================
22.ஆகஸ்டு 2016........06.55 மாலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக