வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

தேடுகிறேன்


Tuesday, September 22, 2015    மீள்பதிவு 


தேடுகிறேன்




தேடுகிறேன்
================================================ருத்ரா இ.பரமசிவன்

என் சுவாசத்தை தேடுகிறேன்.
இது நுரையீரல் தாண்டிய மூச்சு.
எல்லாவற்றிலும் ஒற்றி ஒற்றி எடுத்து
தேடிப்பார்க்கிறேன்.
அழுகிய பிணங்களில் கூட
"வாசுதேவன்"கன்னங்குழியச்சிரிக்கிறான்.
கசாப்புக்கடைகளில்
தோலுரித்து தொங்கிக்கொண்டிருப்பவைகளில் கூட‌
உலகமே விழியாய் கண்ணீர்த்துளிர்க்கும்
கல்வாரி சித்திரங்களைக்காண்கிறேன்.
அகலமான அந்த வட்ட மரக்கட்டையில்
சதைத்துணுக்குகள் கத்தியின் சிற்பமாய்
மனிதப்பசியின் தீகொழுந்துகளில்
நெளிந்து கொண்டிருக்கும் இடுக்குகளில் கூட‌
என் சுவாசத்தை தேடுகிறேன்.
டால்ஃபின் எனும் கடல் சுவடிகளில்
அதன் அல்காரிதம்களின்
கண்ணுக்கு தெரியாத ஒரு பாஸ்வர்ட்
அதன் செதில்களில் சிக்கிக்கொண்டிருப்பதை
நான் தேடுகிறேன்.
வினாடியை பில்லியன் துண்டுகளாக்கி
எந்த துண்டில் அது
கடலில் பத்து பன்னிரெண்டு ரிக்டர் ஸ்கேலாக்கி
கொப்பளித்து
லட்சக்கணக்கான மக்களை விழுங்க‌
காத்திருக்கிறதோ
அந்த மூச்சுக்குமிழியை தேடுகின்றேன்.
அதோ அந்த புல்லாங்குழல்
பல்லாயிரக்கணக்கான
ஜன்ய ராகங்களில்
அல்லது மேள கர்த்தா ராகங்களில்
எந்த "புன்னாக வராளியின்"
அடையாளம் மாறிப்போன ஒரு புன்னாக வராளியில்
இந்த உலகத்தின் மேக்னாக்குழம்பை
வெற்றிலை குதுப்பி உமிழப்போகிறதோ?
ஆம்! அதைத்தான் தேடுகிறேன்.
அது என் மூச்சுச்சுவட்டில் இடறும் வரை
இங்கே எனக்கு எல்லாமும் கடவுள்களே!
அது வளையல் பூச்சியாய் இருந்தாலும்
பரவாயில்லை.
அதனோடு வளைந்து வளைந்து
வலம் வருவேன்.
கடலின் திவலைகள் வைர நெக்லஸ் பூட்டி
ஒவ்வொரு தருணங்களையும்
அழகு படுத்துவதை
அணு அணுவாய் ரசித்துக்கொண்டே
அந்த அணு வெடிப்பை தேடுகின்றேன்.

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக