திங்கள், 8 ஆகஸ்ட், 2016

தேர்



 

தேர்
==============================================ருத்ரா

எத்தனை ஆயிரம் டன் கனம்?
அலங்காரமான
தொங்கட்டான் தோரணங்களில்
வண்ணச்சித்திரங்கள்
எத்தனை?எத்தனை?
அந்த துணி முனையில்
கலை நேர்த்தியுடன் தைக்கப்பட்ட‌
கண்ணாடித்துண்டுகள்
எல்லாத்திசையும் பார்த்து
கண்ணடித்தது.
நாதசுவரமும் தவிலும்
ராகத்தைப் பிழிந்து துவைத்து
இனிமையாய் காற்றில்
நிரவியது.
இராட்சசச்சக்கரங்கள்!
இன்னும் அவை
தேய்த்து தேய்த்து
தெருவின் முதுகுப்பரப்பில்
சுளுக்கு எடுக்க ஆரம்பிக்க வில்லை.
பெரிய நீண்ட வடங்கள்!
அவை தரையில்
புராணத்து வாசுகிப்பாம்புகளாய்
வாய் பொத்திக்கிடக்கின்றன‌!
மேலே இருப்பது
என்ன சாமி என்று
இந்த ஆசாமிகளைக் கேட்கலாம்
என்று போனால்
அங்கே ஆலமரத்தடியில்
நடக்கிறது "கட்டப்பஞ்சாயத்து"
மேலே
சாமி இருக்கா? இல்லையா?
என்றெல்லாம்
நாம ரூப வர்ணங்களையெல்லாம்
கடந்த பஞ்சாயத்து  
அங்கு நடக்கவில்லை!
ஆசாமிகளின்
நான்கு வர்ணத்துக்கும்
அஞ்சாவது வர்ணத்துக்கும்
இடையே நடக்கும் பஞ்சாயத்து அது.
தேர்
அங்கே அம்போ என்று நிற்கிறது.
அந்த "கண்டெய்னர்கள" மாதிரி.
கருப்பு நிழல் மட்டுமே
உள்ளே!

===============================================

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக