வியாழன், 11 ஆகஸ்ட், 2016

மதம்




மதம்
________________________________ருத்ரா இ.பரமசிவன்

அறிந்தவர்களை தலை என்றும்
அறியாதவர்களை கால் என்றும்
போதித்தார்கள்.
ஒரு "போதி" மரத்தடியில்
எல்லாம் தலைகீழ் ஆனது.
இப்போது
லாபவேட்டைக்காரர்களிடம்
மட்டுமே
இந்த வில் அம்பு
விஸ்வரூபமாய் நின்றுகொண்டிருக்கிறது.
அவர்கள் அம்புக்கூட்டிலிருந்து
எய்யப்படும் அம்புகளைக்கவனியுங்கள்
சினிமா டிவிகள்
சாதி சடங்குகள்
சோதிட சொக்கட்டான்கள்
ஓட்டுகளுக்காக‌
சத்திய பரிவர்த்தனைகள்
புரியாத மொழிக்குள் தான்
கடவுள் சுருண்டு படுத்திருப்பதாகவும்
அவரை  எழுப்ப‌
அஷ்டபந்தன கும்பாபிஷேகங்கள்..
தமிழை ஒலித்தால்
எச்சில் பட்டுப்போகும் என்று
எகத்தாள மந்திரங்கள்
கபாலிகள்
அவரகள் கருவுயிர்த்து  வந்ததாகக்கூறும்
இமயமலை பாபாக்கள்
சினிமா  நிழல்களுக்கு
கட்  அவுட் பால்குடங்கள்
கம்ப்யூட்டர்  சித்திரங்களுக்குள்  கூட‌
கூகிள் மொழியிலும்
ஹோமப்புகைச்சல்கள்!
அறிவு குப்பைத்தொட்டிக்கு போகும்போது
மானுடம் சாக்கடையாற்றில்
போய் விழுகிறது.
மதம் எனும் அபினிக்காட்டில்
பாராயணம் செய்துக்கொண்டிருப்பவர்களே
முன்  நோக்கிசெல்லும்
நூற்றாண்டுகள்
உங்களை நசுக்கிக்கொண்டு
ஓடுகிறதே!
ஓர்மையில்லையா?
கூர்ம புராணங்களும் மச்ச புராணங்களும்
உங்களை வழி மறித்தது போதும்.
கூர்மை கொள்ளுங்கள்.
விழித்தெழுங்கள்!

==========================ருத்ரா இ.பரமசிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக