செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மரத்தடி..








மரத்தடி..
==================================================ருத்ரா

இலை அடர்ந்த நிழல் தேடி
நடந்து களைத்தேன்.
வாழ்வின்
அடிச் சூடு பொறுக்காமல்
நிலை குலைந்தேன்.
சொற்கள் குத்தீட்டியில்
துளை பட்ட மனம் வழியே
வழிந்தோடியது உள்ளாத்மா.

புரிதல் இல்லை என்று
புடம் போட்ட சிந்தனையில்
ஏதேதோ சொன்னார்கள்.

வெறுமை அடைக்கப்பட்ட‌
கோடுகளும் வட்டங்களும்
வர்ணத்துடிப்புகளில்
என் மூக்கு முனைமீது
சிறகு முளைத்த "பிக்காஸோ"க்களாய்
சுள்ளென்று
ஒரு மிளகாயை கடிக்க வைத்தது.
மரணம் எனும் முற்றுப்புள்ளி
காக்காய் எச்சமாய்
உன் தலையில் விழுமுன்
கொஞ்சம் சிலுப்பிக்கொள்.

எதற்குத் தான்
இந்த பட்டாம்பூச்சிகள்
படபடக்கின்றனவோ?

கண்ணுக்குத் தெரியாத‌
பூக்களின் உள்ளேயும்
இவைகளுக்கு
ஏழு கடல் தெரியும்.
ஏழு உலகு தெரியும்.
நட்சத்திரக்குவியல்களை
பச்சைப் பசேல் என்று
போர்த்தியிருக்கும் மரத்தடியில்
என் ரத்த வாடையைக்கொண்டா
அங்கே கொச்சைப்படுத்துவது?

புத்தன் சொன்னான்
"அமைதி அடைக"
கொப்புளிக்கும் லாவாவை
விரித்து அமர்ந்து சொன்னான்
"குளிர்மை கொள்க"
என் மனத்தின்
வேர்த்தூவிகளில் எல்லாம்
ஆயிரம் தலைப்பாம்புகள்.
அவன் மீண்டும் மீண்டும் சொன்னான்
அடுத்தவன் வயிற்றுச்சுருக்கங்களில்
தெரியும்
பசி அக்கினி ஒழுகுகையில்
அதை
சாந்திப்படுத்தும்
மந்திரம்
பருக்கைச்சோறுகள் தானே!
அதற்கு வித விதமான வர்ணங்களில்
ஒலிகள் கிளப்புவதில்
யாது பயன்?
யாது அறிவு?
யாது ஒளி?

அதன் பிறகு அந்த கற்கட்டிடங்களின்
கல்கள்
ஒவ்வொன்றாக சிதறின.
வெற்றுச்சத்தங்களின் நரம்புகள்
சுருங்கிக்கொண்டன!

=============================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக