ஆகஸ்டு பதினைந்தே வருக வருக!
==================================================ருத்ரா
காலண்டர் தாள் சரசரப்புகளில்
ராணுவ பூட்ஸ்களின்
மரியாதை ஒலிகள் கேட்கின்றன.
அலங்கார வண்டிகள்
மாநிலம் மாநிலமாய்
பொம்மைக்காட்சிகளில் உயிர் பூசி
மிதந்து வருகின்றன.
ஆனந்த வெள்ளம் திரள்கிறது.
வந்தேமாதர முழக்கத்தின்
புடைப்பு பரிமாணம்
நம் நெஞ்சங்களில் விம்மிப்பெருகுகின்றது.
அது முக்காலங்களின்
வரலாற்றுக்கனத்தின் பரிமாணம்.
நேற்று இன்று நாளை
என்று
எப்படிப்பார்த்தாலும்
வேர்வை கண்ணீர் ரத்தம்
என மூன்று அதிர்வலைகளில்
கனல் மூட்டும் பரிமாணம்.
சாதி சமய வர்ணங்கள் அற்ற
சமூக நீதியின் ஜனநாயகப்பூங்கா நோக்கி
நடை போட வந்திருக்கும்
இன்றைய "ஆகஸ்டு பதினைந்தே"
உன் பின்னே
சுரண்டல் அநியாயங்களால்
நியாயக் கபாலங்களின்
நொறுங்கும் ஒலி கேட்கிறதா?
மும்மலம் அறுக்கும்
முக்தி தத்துவம் இங்கே உண்டு.
வயிற்றுக்காக
மலம் அள்ளும் மனிதர்களும்
இங்கு தான் உண்டு.
இவர்கள் பூசிய வர்ணங்களுக்கும்
அப்பாற்பட்ட இவ்வர்ணங்களுக்கு
ஓ! மூவர்ணமே
உன்னிடம் எதேனும் வர்ணம் உண்டா?
கீழ்சாதியும் மேல்சாதியும்
கலந்து விடக்கூடாதே என்று
கௌரவக்கொலை புரியும் இந்த
கௌரவர்கள் மீது
வஜ்ராயுதம் வீசும் கிருஷ்ணர்கள்
ஏன் உங்கள்
(மகா)பாரதத்தில் இல்லாமல் போனார்கள்?
இதை எல்லாம்
ஆடாமல் அசையாமல் நின்று
பார்த்துக்கொண்டிருக்கும்
"மரப்பாச்சி" ஜனநாயகமா
இந்த ஜனநாயகம்?
"ஆகஸ்டு பதினைந்தே!"
வழக்கமாய் கிழித்துப்போடும்
வெறும் காலண்டர் தாள் அல்ல நீ!
இன்று
புதுத்தீயில் புதுப்பித்து பதிப்பித்து
புடம்போட்டு வந்த
புதிய ஆகஸ்டு பதினைந்து நீ!
புதிய அர்த்தங்களோடு
காலண்டர் தாள்கள்
வரும்
அக்டோபர்களையும் நவம்பர்களையும்
ஒரு ஊமைக்காற்றின்
அசைவுகளில் அசைபோடும்
உள்ளொலிகளையும்
உற்றுக்கேட்கிறாயா மூவர்ணகொடியே!
தியாக உடல்களின் துணி கிழித்து
எங்கள் இதயங்கள் கொண்டு
தைத்த
எங்கள் இன்னுயிர்க்கொடியல்லவா நீ?
சமுதாய நீதியின் வெளிச்சமாய்
ஒரு "ஆகஸ்டு பதினைந்தை"
எங்களின்
இனியதோர் விடியல் ஆக்கு !
அதுவரை
எங்கள் நாளங்களும் நரம்புகளும்
புடைத்துக்கொண்டே இருக்கும்
துடித்துக்கொண்டே இருக்கும்.
"ஜெய்ஹிந்த்"
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக