“ஒளிமரம்” "ருத்ராவின் கவிதைகள்"
விளக்குக்கு
இலைகளுக்குள்
ஒளிந்து விளையாட ஆசை.
அச்சத்தின் அந்த
நீலப்போர்வைக்குள்
நட்சத்திரங்களும்
எங்கோ ஒளிந்து கொண்டன.
"நெற்றி ஒற்றைக்கண்ணனாக"
அந்த சோடியம் விளக்கு.
மஞ்சள் ஒளி "ஷவரில்"
நடு நடுக்கம்.
பற்கள் கிட்டித்தன.
அவன் வருவானா?
மணி ஏறிக்கொண்டே போகிறதே.
காத்திருப்பு எனும்
கண்ணுக்குத் தெரியாத
ஊசியில்
அவள் தவம்.
விஞ்ஞானத்தையும்
விழுங்கியது காதல்.
வினாடியில்
லட்சங்களின் ஒரு பங்கு
நேனோ கூட
நத்தையாகத்தான் ஊர்கிறது.
அவன் வருவானா?
கேள்வி
அந்த இலைகளின்
சல்லடையில்
ஒழுகி
துடி துடிக்கின்றன.
"டென் கம்மாண்மெண்ட்ஸில்"
மோசஸ்
கடல் பிளந்து வருவது போல்
இந்த
வானம் பிளந்து அவன்
வந்துவிட மாட்டானா?
இந்த விளக்கு காத்திருக்கிறது.
இலைகள் காத்திருக்கின்றன.
இந்த ஒளியும் காத்திருக்கிறது.
இந்த ஒளிக்குள் ஒளிந்திருக்கும்
ஒரு இருட்டும்
இங்கு காத்திருக்கிறது.
==========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக