ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

என்ன கண்ணாமூச்சி விளையாட்டு இது?





என்ன கண்ணாமூச்சி விளையாட்டு இது?
==================================================ருத்ரா இ பரமசிவன்

என்ன கண்ணாமூச்சி விளையாட்டு இது?
வயதுகளின் மராமரங்களுக்கூடே
சில சமயங்களில்
மின்னலை நாணேற்றியிருக்கிறாய்
பட்டாம்பூச்சிகளின் மழையில்
நனைந்திருக்கிறேன் .
அவள் சிரிப்பின் இனிப்பை
எதற்கு ஒப்பிடுவது?
இந்த அகன்ற வானப்பிழம்பே
ஒரு "இருட்டுக்கடை" அல்வா தான்.
அதை எத்தனையாய் கூறு போடுவது?
எத்தனை தடவை சப்பு கொட்டிக்கொண்டிருப்பது?
தடாலென்று
நாடகத்தின்அந்த திரை மாற்றம்
தலையில் விழுந்தது.
அதற்குள்
ஒரு கூடு ஒரு அழகிய பறவையுடன்.
கூட்டுக்குள் நான் மாணிக்க குஞ்சுகளுடன் .
எத்தனை நிகழ்வுகள் ? எத்தனை இழைவுகள்?
அந்த அடுக்குகளில் எல்லாம்..
அந்த இடுக்குகளில் எல்லாம் ...
கலர் வனங்களும் உண்டு.
கழு மரங்களும் உண்டு.
அதற்குள் குஞ்சுகள்
மண்டைக்குள் நுழையாத
"பூலியன் அல்ஜீப்பிரா"வுக்குள்
எல்லாம் நுழைந்து
அமெரிக்காவின் கணினிக் கம்பெனிகளின்
மின் நரம்பு முடிச்சுக்களில்
போய் சுகமாக உட்கார்ந்து கொண்டன.
திரை விலகி  திரை விழுந்து
எத்தனைக்காட்சிகள் .
நரை கூடிய நந்தவனம் மட்டுமே
கையில் மிச்சம்.
எனக்கு அவள் அவளுக்கு நான்.
இந்த பொன் சங்கிலியில் கோர்த்துக்கொண்டது
எங்கள் அந்திப்பொன் வண்ணக்  கடற்கரை.
ஆம். அது ஆஸ்பத்திரியின்
அகலக்கண்ணாடித் தாழ்வாரங்களில்....
ஆத்மா என்பது கண்ணுக்கு தெரியாத
ஏதோ ஒன்று.
அதன் உள்ளார்ந்த பற்சக்கரங்களுக்குள்ளும்
கசக்கி பிழியப்பட்டேன்.
மனிதச்சாறு
மதிப்பில்லாதது.
தேவர்களின் அமிர்த கலசங்கள் எல்லாம்
பல் தேய்த்து வாய் கொப்புளிக்கக்கூட
உபயோகப்படாது.
இந்த மனிதம் வட்டிக்கட்டப்படுவதற்குள்
எத்தனையோ துன்பச்சல்லடைகள்.
கண்ணீரின் அமிலக்குளிப்புகள்.
இன்னும் ஒளித்து ஒளித்து விளையாடுகிறாய்.
எதற்கு இந்த வெள்ளிப்பிழம்பை
உருக்கி வார்த்து
உறுத்து உறுத்துப் பார்க்கின் றாய்?
உன் சிரிப்பை கொஞ்சம் நிறுத்தேன்.
முடியாது தான்.
உயிர்கள் கரைந்து ஒழுகி
காணாமல் போனாலும்
நீ ஒரு மின்சாரப் பிரபஞ்சம்  அல்லவா?
"க்ளுக்" என்று சிரித்து விட்டு
மரக்கிளைகளுக்குள்
அவள் சிக்கிக்கொண்டாள் .

=====================================================














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக