செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

நிழற்கம்பளம்




நிழற்கம்பளம்
==================================================ருத்ரா

இந்த நிழல் ஆறுகளின்
கங்கோத்ரி
அந்த இலைகளின் நடுவில்.
அவை ஒவ்வொன்றும் இதயம்!
உதிர்ந்து
முளைத்து
மூளிகம்புகளிலும்
துடிப்பு தான்.
கனவு தான்.
அணில்கள் கூரிய பற்கள் கொண்டு
தைத்தது போல்
பரவிக்கிடக்கும்
இந்த கருப்பு நிழற்கம்பள விரிப்புகளின்
அடியில்
எங்கோ தொலை தூரத்து ஆழத்தில்
பழைய நூற்றாண்டுகளின்
கபாலங்கள்.
அவற்றின் கருப்புகுழிகளில்கூட‌
வாளும் கத்தியும் தான்.
ரத்தம் வறண்ட நிழல்களிலும்
திட்டு திட்டுகளாய்
சிரிப்புப் பிசிறுகள்.
பசுமை போர்த்த மண்ணின் உடம்பில்
இன்னும்
வெறிகளை
பச்சை குத்தி யார் அழகு பார்ப்பது?
கடவுளின்
நிழற்சதையில் உருகும் ஒளியில்
ஏன் சுடுகாட்டுத்தீயை
சூட்டி மகிழ்கிறீர்கள்?
மனிதம் பூத்து பூத்துக் குலுங்கவேண்டும்.
நம்பிக்கையின் மொத்த திரட்சியாய் 
இந்த நிழல்களை உருக்கிக்காய்ச்சி
ஒரு ஆயுதம் செய்வோம்.
அந்த துப்பாக்கி துறுத்திய‌
கோரைப்பல் மிருகங்களை
அடித்து விரட்டுவோம்.
மானுட நேயமும் அன்பும்
இந்த நிழல்களை
பிரசவிக்கும்
இலைகளின் கன்னிக்குடங்களிலிருந்து
உயிர்ப்புகளை மட்டுமே
கசியச்செய்யட்டும்.

===================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக