ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

விநாயகரை நோக்கி ஒரு அகவல்.








































நன்றி.. விக்கிப்பீடியா 


விநாயகரை நோக்கி ஒரு அகவல்.
=====================================ருத்ரா இ.பரமசிவன்


ஆனைமுகம் அஞ்சுதற்கல்ல.
ஞானமூறும் கண்முகம் கொண்டு
அண்ணிக் காண்குவம் அண்டம் யாவும்.
எண்ணிப் பார்த்திடில் எண்ணிக்கையில்லை.
பிண்டம் பிடித்த பண்டம் யாவும்
தின்று அதன் திண்மை தெரிந்திடவேண்டி
கொழுக்கட்டையாகி நம் முன் நிற்கும்.
முப்பரிமாண புடைப்பும் தாண்டி
காலம் கூட்டி கோலம் சேர்த்து
கூட்டுத்தொகை சங்கிலி பின்னி
பல பரிமாண அதிர்விழை என்னும்
எம் தியரியும் ஸ்ட்ரிங் தியரியுமாய்
விஞ்ஞான அர்ச்சனை செய்திட்டபோதும்
விண்டிட முடியலை அண்டம் தன்னை.
வடிவக்கணித ஜியாமெட்ரியில்
சொல்லிப்பார்க்க வேண்டும் என்றால்
கொம்பும் வயிறும் கோலிக்குண்டுகள்
காட்டும் மிரட்சியின் கண்கள் இரண்டும்
உருவம் காட்டுவதெல்லாமே
டோபாலஜி கணிதம் ஆகும்.
மூளி வெளியை வெட்ட வெளியை
உளியால் வெட்ட இயலுமா உள்ளுவீர்.
பிசைந்து எப்படி முறுக்கினாலும்
"ரப்பர்" வெளியிது அறிவீர்!தெளிவீர்!
மோபியஸ் ஸ்ட்ரிப் எனும் அற்புத வளையம்.
இருபக்கமும் ஒருபக்கம் காட்டும்.
இறப்பும் பிறப்பும் ஒருபக்கம் தானே.
மறு பக்கம் உற்று பார்த்திட்டாலும்
முகமே முதுகாய் ஆகும்.
முதுகும் கூட முகமே ஆகும்.
க்ளீயன் என்றொரு அருமை மேதை
ஒரு கண்ணாடிக்குடுவை காட்டிடுகின்றார்.
கொழ கொழ உருவெளி அண்டம் பற்றி
அழகாய்க் காட்டினார் தும்பிக்கையுடனே.
அதுவே எந்தன் கணித விநாயகர்
கடலில் கரைத்திட செய்திடவில்லை...உயர்
கருத்தில் மூண்ட அக்கனற்பிழம்பே
நான் உண்ணும் அருஞ்சுவை மோதகம்.


கொட்டும் முழுக்கும் 
கத்தி மிரட்டலும்
மின் கம்பம் மிரளும் உயர‌
களிமண் பொம்மையும்
காழ்ப்புகள் அடைத்து
கனபரிமாணம் எல்லாம்
கட்சிக்கொடிகள்
காலாவதி மதங்கள்
திணித்து செய்த‌
உருவம் தன்னில்
ஏன் தான் இத்தனை
உருட்டல் மிரட்டல்?
உலகம் உணர்வீர்!
மானிட அன்பே
மையம் கொண்டு
ஞானப்பழந்தனை
அறிவில் வென்ற‌
ஆனை முகமே நம்
அறிவின் முகமாம்.

===================================================
30 ஆகஸ்டு 2014 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக