செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

முட்களின் தாண்டவம்







முட்களின் தாண்டவம்
==============================================ருத்ரா

பாலைவனம் போல்
பகலவன் மட்டுமே
பாய்விரித்து படுத்துக்கிடக்கும்
மாநிலம் என்றாலும்
கட்டிடங்களின்
அழகிய சோலையுடன்
அழகு மிளிர்வது
அமெரிக்காவின் அரிஸோனா!
அரைப்பனை உயர‌
அந்த கள்ளிக்காட்டிலும்
சூரியத்தூவலின்
ஆரஞ்சுவண்ணகுளியலில்
"வைரமுத்துக்கள்"
கவிதையாய் குவிந்துக்கிடக்கும்.

அந்த முட்களின் தாண்டவத்திலும்
ஒரு உட்கிடக்கை உண்டு.
அந்த முள்ளுடம்புப் பொந்துகளிலும்
சிறு குருவிகள்
அலகுகள் கொண்டு
கிச்சு கிச்சு மூட்டுவதும்
புல்லிய சிறகுகளைக்கொண்டு
புல்லரிக்கச்செய்வதும்
அப்போதும் புதிதாய் முட்கள்
விறைத்து வந்து
உணர்ச்சி ததும்புவதும் உண்டு.
இந்த கள்ளிச்சிவனின்
திருவிளையாடல்கள்
எந்த ஏட்டிலும் காணப்படாது.
உச்சியில் எப்போதாவது பூக்கும்
கடுஞ்சிவப்புப்பூக்களில்
வந்து உட்காரும் வண்டுகள்
அங்கே கொஞ்சம் வட்டமடித்து
அந்த முள் முதுகையும்
சொறிந்து விடுவதுண்டு.
புராணத்தொப்பூள் கொடி நாறும்
அந்த இருக்கையில் இருக்கும்
பிரம்மாவுக்கு
ஏது இந்த சுகம்?
அந்த நீண்ட நிழல்களின்
காட்டில் புகுந்து வருகையில்
டி.எஸ்.எலியட்டின் காலடிச்சுவடுகள்
மெலிதாய் கேட்கும்.
"வீ ஆர் தெ ஹாலோமென்"
எனும் அவன் கவிதைகள்
அந்த முள்ளின் முதிர் வனங்களில்
வாழ் தத்துவத்தின்
ரோஜாக்களைப் பூத்து நிற்கும்.
கள்ளோ காவியமோ
என நாவல் படைத்த‌
டாக்டர் மு.வ கூட‌
இங்கிருந்து எழுதியிருந்தால்
"முள்ளோ காவியமோ"
படைத்திருப்பார்.
மனிதன்
இன்றைய
"சோளக்காட்டுப்பொம்மை" உடையில்
நாகரிகத்தின் சிகரத்தில்
உட்கார்ந்து இருக்கிறான்.
ஏன்?
ஆணும் ஆணும் கூட‌
பெண்ணும் பெண்ணும் கூட‌
"மாங்கல்யம் தந்துநாநே"
பண்ணிக்கொள்ளலாம் என்கிறான்.
இந்தியாவின்
யோகாவையும் வேதாந்தங்களையும் தான்
தன் கிழிந்து தொங்கும்
ஜீன்ஸ் பாக்கெட்டுகளில்
திணித்து வைத்துக்கொண்டிருக்கிறான்.
உச்சிக்குடுமி ஆட்டி ஆட்டி
"ஹரே ராமா!ஹரே க்ருஷ்ணா"பாடுகிறான்.
ஃபண்டாஸி ஃபில்ம் என்ற பெயரில்
ஹாலிஉட்டையே
நம் இதிஹாசக்கற்பனைகளால்
சவைத்து சவைத்து
"பாக்ஸ் ஆஃபீஸ்"வசூல்கள்
அள்ளிக்குவிக்கிறான்.
மனிதனைத்தான் காண முடிவதில்லை.
மூளையும் இதயமும் உணர்ச்சிகளும்
இங்கே
டாலர்களாக குவிகின்றன.
மனிதன்
இங்கே எங்கேயோதான்
நசுங்கிக்கிடக்கிறான்.
அவன் கிரீச்சொலிகள்
கேட்கின்றனவா?
உங்களுக்கு?


===================================================


2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

கேட்கத் தெரிந்தவனுக்கு
சங்கீதமாய்க் கேட்கிறது
அந்தக் கிரீச் ஒலிகள்
சந்தைகடைச் சப்தத்தை மீறியும்
சராசரிச் சல்லாபங்களைத் தாண்டியும்...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி திரு.எஸ்.ரமணி அவர்களே

அந்த கிரீச் ஒலிகளில்
இன்னும் பல
மில்லியன் ஆண்டுகளை
தாண்டியும் சுவாசிக்கப்போகும்
புதிய "பரிணாமம்"
சுவடுகள் காட்டுமா?
உங்கள் வரிகளில் அந்த‌
வெளிச்சம் தெரிகிறது.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக