புதன், 17 ஆகஸ்ட், 2016

என்ன சொல்லவேண்டும்?
















என்ன சொல்லவேண்டும்?
======================================================ருத்ரா

என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
நம் நாட்டு ஜனநாயகம் உலகத்திலேயே
பெரிய ஜனநாயகம் என்றா?
சொல்லிவிடுவோம்!
பெரிய ஜனநாயகம் தான்!
பாருங்கள் கியூவில் பொறுமையாக நின்று
அந்த பொறியை தட்டுகிறார்கள்.
கட்டிலில் நாளை சாகப்போகும்
ஒரு தொண்ணூத்து அஞ்சு வயசு ஓட்டு கூட‌
நாலைந்து பேரால்
தூக்கி வரப்படுகிறது.
கை நடுங்கிக்கொண்டே வரும்
பொக்கைவாய்ப் பாட்டி கூட‌
வாயை குகை போல் திறந்து சிரித்துக்கொண்டே
அவளுக்கு தெரிந்த சின்னத்தில்
தட்டச்சொல்லி
அதிகாரிகளிடம் "அதிகார பூர்வமாக" சொல்லுகிறாள்.
ஓட்டுகளெல்லாம் தட்டியாகி விட்டது!
அவை ரகசியமாக பூட்டி வைக்கப்படுகிறது.
ராவெல்லாம் சுவர்க்கோழிகள்
கொறித்து கொறித்து
இருட்டைத் தூளாக்கிப் போடுகின்றன.
இடையில்
கிடைக்கும் நாட்களில்
"எக்சிட் போல்" என்று
ஒரு சொக்கட்டான் விளையாட்டு விளையாடுகிறார்கள்.
ஊடகங்கள் அதில்
சில்லறைகள் பார்த்துக்கொள்ளுகின்றன.
ஒவ்வொரு கட்சியும்
ஒவ்வொரு விதமாக நாக்கை சப்புக்கொட்டிக்கொள்கின்றன.
தேர்தல் ஆணையம்
சர்க்கஸ்காரர் போல்
சவுக்கை சொடுக்கிக்கொள்கிறது?
சுளீர் சுளீர் என்று சத்தங்கள் பிரமாதம்.
யாருக்கும் வலியில்லை.
ஓட்டுப்போட்டு போட்டு கை வலித்தவர்களுக்கே
எல்லாம் மரத்துப்போயிற்று.
இந்த முதலைகளுக்கு என்ன கவலை?
எல்லாரும் காத்து காத்து கண் பூத்து சலித்தார்கள்

அந்தக்கணிப்பொறிக்குள் என்ன புகுந்தது?
காடும் மலைகளும் கடலும் அலைகளும்
முதலில் தீட்டப்பட்டு விட்டன!
விடியல் மட்டுமே முளைக்க வேண்டியது பாக்கி!
உயர்ந்த நீதி மன்றங்கள் எல்லாம்
தேள் கொடுக்கு மாதிரி கொட்டி
இவர்களெல்லாம் தகுதியில்லை
என்று குதித்து முடித்துவிட்டது.
தேள் நட்டுவாக்கிளிகள் எல்லம்
பஜ்ஜி மாதிரி சாப்பிட்டுவிட்டு வருபவர்கள்
நாற்காலிகளில் ஏற்கனவே துண்டு போட்டு விட்டு
தலைகாட்ட காத்திருக்கிறார்கள்.
நுணுக்கமான சட்ட பாயிண்டுகள் எல்லாம் தேவையில்லை.
ரெண்டு விரலோடு மூணு விரலை
முட்டி முட்டிச்சேர்த்துப் பார்த்து
ரெண்டாம் கிளாஸ் வகுப்பில் சிலேட்டில்
ரெண்டும் மூணும் ரெண்டு என்று கூட்டல் போட்டுவிட்டு
சந்தடி சாக்கில் வாத்தியாரிடம் ரைட் வாங்கி பாஸ் ஆகிய
பிற்காலத்து மேதைகள் கூட‌
நம் ஜனநாயகத்தை வினாயகச்சதுர்த்திக்களிமண் பொம்மை போல்
ஆக்கி அப்படியே சாக்கடைக்கடலில் கலந்து கரைத்து
ஒண்ணுமில்லாமல் ஆக்கி விடலாம்.
சாமி பொம்மையைப்பத்தி நாம் ஏதும் பேசக்கூடாது.
சாமி கண்ணைக்குத்திவிடும்.
கட் அவுட் கதாநாயகர்கள் கூட‌
சினிமாக்களில் தாம் தூம் என்று "பஞ்சு"கள் பறக்கவிட்டு விட்டு
பாக்ஸ் ஆஃபீஸை அடைகாக்க போய்விட்டார்கள்.

அப்பாடா!
ஒரு வழியாய் விடிந்தது.
எங்கு பார்த்தாலும் "பத்தாயிரம் வாலாக்கள்"வெடித்துத்தீர்த்தன.

சிதறிக்கிடக்கும்
அந்த காகிதக்குப்பைகளையெல்லாம் சேர்த்து வையுங்கள்.
மறுபடியும் அடுத்த தடவை
அவை வந்து தானே ஓட்டு போடணும்.

=======================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக