வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

வேதாளங்கள்



வேதாளங்கள்
=============================================ருத்ரா இ பரமசிவன்

இங்கிருந்து  அங்கு நடக்கிறேன்.
அங்கிருந்து இங்கு நடக்கிறேன்.
என் காலடி தேய்ப்புகளில்
எத்தனை சிற்றெரும்புகள் நசுங்கின!
என் விலையுயர்ந்த கார் தெருவின் தார் முதுகை
சிராய்த்துக்கொண்ட போது
எத்தனை கோழிகள் சிதைந்தன?
ஆட்டுக்குட்டிகள் ரத்தகுங்குமத்தை
தங்கள் மீது வழியவிட்டு உயிரை விட்டன.
என் மனம் கொஞ்சம்  கூட அசைந்து கொடுக்கவில்லை.
நான் நடத்தும் ஆலைகள்
மண்ணின் அடிவயிற்றை சுரண்டி
தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன.
அருகே உள்ள கிணறுகள்  மலடுகள்  ஆகி
அவர்கள் எல்லாம் நசுங்கிப்போய் தவமிருந்து
பிளாஸ்டிக் குடங்களோடு தண்ணீருக்கு
உயிர் பிழிந்து சாக்கடைநீராய்
தெருவெல்லாம் ஓடுகின்றனர்.
அடுக்குமனைகள் ஆயிரமாய் கட்டி
கோடிகளை  என் கக்கத்தில் சுருட்டிக்கொள்ள
ஆற்றுமணலை  லாரி லாரிகளாய் தின்கின்ற
பகாசுரன் ஆகிக்கொள்கிறேன்.
எனக்கு எந்த உறுத்தலும் இல்லை.
இந்த பொருளாதார வேட்டைக்காட்டில்
ஆளுக்கொரு கையில் கோடரி கொடுத்து
வெட்ட முடிந்தவர்களை வெட்டிக்கொள்ளட்டும்
என்று லட்சக்கணக்கில் பட்டங்கள் விற்கிறேன்.
ராட்ஸச கட்டிடங்களில் அந்தக்கல்லூரிகளும்
கண்ணுக்கு தெரியாத கோரைப்பற்கள் நீட்டி
இளைய யுகத்தையே குதறிபோட்டு வெறியாடுகின்றன.
வியாபாரம் விளம்பரம் பங்கு மார்க்கெட்  என்று
என் சுருள் நாக்குகள் சுருட்டிக்கொள்ளாத கிளைகளே இல்லை.
எனக்கு எந்தக்கவலையும் இல்லை.
நியாய  ஆணிகள் முடுக்கப்பட்ட அரசு எந்திரங்களின்
ரம்ப நாக்குகள் எல்லாம் ரப்பர் பற்களால்
எங்களுக்கு கிச்சு கிச்சு முட்டுவதே
முக்கியப்பணிகளாய் முத்திரை ஆக்கப்பட்டுள்ளன.
மனிதன் மனிதனையே குருமா பண்ணி சாப்பிடுகிற
காட்டு வாழ்க்கை தான் இந்த ஜீன்ஸ்களிலும்
மடிப்பு மடிப்பாய் அணியும் கால்சட்டைகளிலும்
சடை  சடையாய் விழுதுகளை இறக்கியிருக்கின்றன.
அந்த நச்சுமரக்காடுகள் நிழல் தான்
என் கோவில்கள்  என்பதில் எனக்கு கூச்சமே இல்லை.
என் மன வேதாளங்கள் ஆயிரம் கை நீட்டி
இந்த குஞ்சுகளின் குரல்வளைகளை நெறிக்க
மகிழ்ச்சி  வெறி கொள்ளுகிறது.
காலம் காலமாய் நான் சுகமாக இப்படி
உட்கார்ந்து கொள்ள சட்டத்தின் நூலாம்படைகளே
எனக்கு சித்திர ஆசனம் பின்னி வைத்திருக்கிறது.
சாமி கும்பிடுங்கள்.உங்கள் கூம்பும் மனங்களுக்குள்
கூடாரம் அடித்துக்கொள்வேன்.
இந்த வேதாளங்களை வெட்டும் கோடரிகள் முளைக்கும் வரை......

"டேய் யார்ரா அங்கே?
சரக்க வச்சுக்கிட்டு உக்காந்திருக்கேன்
போங்கடா போயி சோடாவும்  முந்திரிப்பருப்பும்
கொண்டாங்கடா! நாய்களா!
முண்டான் முண்டானாய்  கணு முளைத்து
வெறியாய் ரத்தப்பால் சொட்டும்
அந்த வேதாள மரங்கள் கிளைகளை
ஆட்டிக்கொண்டே இருந்தன.

========================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக