சனி, 6 ஆகஸ்ட், 2016

மூன்று கவிதைகள்





மூன்று கவிதைகள்
=========================================ருத்ரா


சரித்திரம்


எதைவேண்டுமானாலும் எழுது.
எழுதியதை அழித்து அழித்து எழுது.
மக்களையும் சம்பவங்களையும் கூட‌
அழித்து அழித்து எழுது.
காகிதங்கள் காலியாகவே
இருக்கட்டும்.


__________________________________________




எழுத்து சுதந்திரம்



எனக்குத்தோன்றியதை எழுதுவேன்.
என்ன தோன்றியதோ
கிழித்துப்போடுவேன்
அல்லது
கசக்கிப்போடுவேன்.
என் வீட்டுக்குப்பைத்தொட்டியில்
போட்டு போட்டு அலுத்துப் போகலாம்.
பத்திரிகைக்கு அனுப்புவேன்.
அவன் சொல்லுவான்
தபால் தலை ஒட்டி அனுப்பு என்று.
தபால் தலைகள் எல்லாம் வைப்பது கிடையாது.
கிடக்கட்டும்
அவன் குப்பைத்தொட்டியில் என்று.


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________



சுவர்ப்பல்லிகள்



காதலிக்கத் தொடங்கியபோது
வாழ்க்கை தொடங்கி விட்டது.
வாழ்க்கை தொடங்கிய போது
ஒப்பாரிகள் கேட்டன.
ஒப்பாரிகள் கேட்க தொடங்கிய போது
சுவர்ப்பல்லி ஒலித்தது.
அதன் அருகே
பாவம்
விலகத்தெரியாமல்
ஒரு கரப்பான் பூச்சி.
சுவர்ப்பல்லிகள்
விக்கிரகங்களாய்
கோயிலில்
பயத்தை
ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

_____________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக