இப்போ கொஞ்சம் அரசியல் பேசலாமா?
பேசலாமே.
நாம் நடத்தும் வாழ்க்கையின்
அடி நீரோட்டத்திலிருந்து தான்
அரசியல் குமிழியிடுகிறது.
என்ன?
உனக்கு பசி தீர்க்கும் உணவு கிடைக்க
உன் உடைகள் கிடைக்க
தனிமை எனும் உன் "புனிதம்" காக்கப்பட
தகுந்த ஒரு இடம் கிடைக்க
மொத்தத்தில் நீ வாழ
பணம் தேவைப்படுகிறது.
அதை நீ பெறுவதே ஒரு அரசியல்.
அந்த அரசியலில்
நூற்றுக்கு நூறு விழுக்காட்டு மக்கள்
வெற்றி பெருவதில்லை.
அந்த அரசியலில் தோற்றவர்களும் வென்றவர்களும்
நிரவி பரவி இழைந்து வாழும் சூழலே
இங்கு சமுதாயம் எனப்படுகிறது.
"எல்லாருக்கும் எல்லாமும்" கிடைக்க இயலா
அமைப்பு முறையே
இந்த சமுதாயத்தின் தலைமேல்
பாறாங்கல்லை ஏற்றியிருக்கிறது.
சரி..
நாம் நம் வசதிக்கு விளையாட்டாய்
கண்டு பிடித்த பொம்மை தான்
கடவுள்.
நாம் எல்லோரும் குழந்தைகள் என்றால்
இந்த பொம்மைகளே நம்
சுமைக்குழந்தைகள்.
அதாவது
நம்மை சுமப்பதும் அவையே!
நாம் சுமப்பதும் அவையே!
இந்த பொம்மைகளைப் பாதுகாக்கவே
நமக்கு வலிமையான ராணுவம் தேவைப்படுகிறது.
நம் நம் பொம்மைகள் நமக்கு உசத்தி என்று
நமக்குள் மோதி உரசிக்கொள்வதும்
நமக்கு வாழ்க்கையாகிப் போகிறது.
அதற்கு
ஆறுகளாக
நம் ரத்தத்தை பெருகி
ஓடச்செய்கிறோம்.
இது ஏன்?
இந்த நம் பொம்மையைக்காக்கும்
"சடங்குகளும் சாஸ்திரங்களும்"
மனிதர்களாகிய நம்மிடம் இருக்கும்
"மனிதம்" எனும் பேரொளியை
இருட்டடித்து விடுகிறது.
மொத்தத்தில் இது நம்
இருட்டு தான்.
நாம் அறிவியலின் சிகரம் ஏறியபோதும்
இந்த சுமை நம்மிடம்
அப்பிக்கொண்டு தான் இருக்கிறது.
நம் இருட்டை விரட்டி
நம் வெளிச்சத்தை தெளிவாய்த்
திறக்கும் சன்னலின் குறுக்கு நெடுக்குக்
கம்பிகளில்
நாம் முகம் அழுத்தி நின்று
எல்லாம் நுண்ணிய வாறு
சிந்திக்க நம் நெற்றி சுருக்குவதே
அரசியல் ஆகும்!
அப்படி அந்த "சமுதாய மனிதம்" தரும்
சன்னல் வார்ப்புகளில்
உங்கள் சிந்தனையைப் பாய்ச்சுங்கள்.
அரசியல் வானம்
பளிச்சிடுகிறதே தெரிகிறதா?
(தொடரும்)
__________________________________________
யுகசிற்பியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக