(திரு வண்ணதாசன் அவர்கள் இன்று 27.05.2026
முகநூலில் பதிவிட்ட கவிதை கண்டு
சிலிர்த்துப்போன கவிதை இது.)
________________________________________________
கவிதையருவியே! வண்ணதாசன் அவர்களே.
தோசை மாவு வட்டமாய் தோசைக்கல்லில்
ஒரு கணியன் பூங்குன்றனைக்காட்டுகிறது.
அய்யன் வள்ளுவன் வரிகளான
"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளது உணவார் பெறின்"
என்பதை
இந்த தோசைக்கல் தமிழ்ச்சங்கத்தில்
ஓசையின்றி அரங்கேற்றுகிறது.
முன்கை வளையல் ஒலிகள்
வட்டம் போட்டு சத்தம்போட்டு
நம்மை எச்சரிக்கின்றன.
கவிதையில் நீங்கள் காட்டிய
அரைக்கண் கிழட்டுப்பூனைகளாய்
தமிழர்கள்
தங்களையும் மறந்து தமிழையும் மறந்து
மதில் மேல் உட்கார்ந்தே
கல்லறைக்குள் விழுந்து மறைகின்றனர்.
கவிதை
எழுதிச்சொல்வது அல்ல.
சொல்லி எழுதுவதும் அல்ல.
சொல்லாமல்
மனக்குடைச்சல் செய்து சிந்தனைக்குள் ஒரு
குகை வழி ஏற்பத்துவது தான் கவிதை.
இந்தப்புறம் இருந்து அந்தப்புறம் போவதற்கு
"கல் பொருதிறங்கும் மல்லல் பேர்யாறு" மட்டும் அல்ல
இந்த "சொல்பொருது" ஆழ்ந்து அமிழ்ந்து
அந்த குகையின் அந்தப்புற வழியையும்
எட்டுவதும் தான்.
மெய்சிலிர்க்கிறது.
மனம் விதிர்க்கிறது.
தங்கள் கவிதை படித்து!!!
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக