வியாழன், 14 மே, 2026

அட்டைக்கத்தி

 


அன்புள்ள சீமான் அவர்களே.


தங்களது தற்போதைய 

மனம் நைந்த சொற்கள்

நெகிழ்ச்சியானவை தான்.

ஆனாலும்

தமிழின் இமயச்சிகரம் 

ஏறி நின்ற பின்

தமிழையே அங்கிருந்து

உருட்டி விட்டது போன்ற‌

உணர்வு தான் எங்களுக்கு

உங்கள் அரசியலில்.

தமிழ் உலக மொழிகளில் எல்லாம்

வேராகவும் வேர்த்தூவியாகவும்

இழைந்த பிறகு 

அது ஏதோ ஒரு தெலுங்கனின்

பிடிக்குள் அகப்பட்டதாய்

வெறி ஏற்றிப்பேசும் உங்கள்

சொல்லாடல்கள் எல்லாம்

வெறும் வெற்றுப்பேச்சுகளே.

சமஸ்கிருதம் தான் 

தமிழ் உட்பட‌

எல்லாமொழிகளுக்கும் தாய் என‌

கொக்கரிப்பவர்களின் 

சமஸ்கிருதக் கடப்பாரை கொண்டு

தமிழ்க்கோட்டையை

தகர்ப்பதாக கூறும் நீங்கள்

தமிழ்ப்பகைவர்களை விட கொடூரமானவர்.

வந்தாரை வாழ  வைக்கும் தமிழகம் 

என முடிசூட்டிக்கொண்டு

உங்களைப்போன்ற 

தமிழ் வஞ்சனையாளர்களை எல்லாம்

ஆதரித்துக்கொண்டிருக்கும்

இந்த தமிழ் தான்

உங்களுக்கும் நிழல் கொடுக்கிறது

என்பதை மறவாதீர்.

கல் எனும் வெறும் இயல்பை வைத்துக்கொண்டு

கூழாங்கல்

இமயத்தை ஒப்பு நோக்கி ஏறிட்டுப்பார்ப்பது போல்

ஸ்டாலின் அவர்களின் தோல்வியைப் பார்த்து

உங்களை மார் தட்டிக்கொள்ளும் உங்கள்

புல்லறிவாளத்தன்மை கண்டு

நகைப்பு மேலிடுகிறது.

கான முயல் எய்யும் உங்களோடு

யானையையே பொருது 

வெல்லும் வீரம் கொண்ட‌

எங்களை இனியும்

இப்படி அட்டைக்கத்தி வைத்துக்கொண்டு

பம்மாத்து செய்யும் வித்தைகளைக்

காட்டி சோர்ந்து போகாதீர்கள்.

_______________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக