அன்பான இளைஞர்களே
இப்படி அழைப்பதன் மூலம்
நான் இளைஞன் இல்லை என்றோ
அல்லது
இளைஞர்களின் சீறும் அலைகளில்
நானும் ஒரு திவலை என்றோ
நீ எடுத்துக்கொள்ளலாம்.
இளைஞன் என்பது
ஒரு சிந்தனைப்புயல்.
அது வயதுகளின் கனத்தில்
தொய்வதில்லை.
அது வயதுகளின் இலேசான
காக்காய் இறகுகளும் இல்லை.
"உன்னையே நீ அறிவாய்" என்று
அன்று முழக்கமிட்டவன் வயது
கி மு க்களில் குமிழியிட்டது.
நஞ்சுக்கோப்பைகள்
அவனுக்கு
முற்றுப்புள்ளி வைத்த போதும்
அவன் கடல் அலைகள்
எல்லா இடத்திலும் இன்னமும்
கால்கள் நனைக்கின்றன.
உள்ளத்துள் அளைகின்றன.
சீற வேண்டிய தருணங்களை
தவற விட்டால்
மேற்கே படுக்கப்போகும் சூரியன்கள்
உன் மீது காறி உமிழ்ந்து விட்டுத்தான் போகும்.
எனவே
தமிழா!
சீறு.
உன் பழஞ்சுவடிகளில்
உன் எலும்பு மிச்சங்களும்
ரத்தச்சுவடுகளும்
சொல்லும் வரலாற்று வரிகள்
சாட்டை அடிகளாய்
கிளர்ந்து கிளர்ந்து
தீ மூட்டுவதெல்லாம்
இந்த கிழக்குகளில் உன்
நெற்றிக்கண்களை
நாற்று நடுவதற்குத்தான்.
சூழ்ச்சிகளின் புள்ளிகள் கூட
போலியான புழுதிப்புயல்களை
அள்ளி வீசலாம்.
அவையும் உன் கணக்கில் வரக்
காத்து இருக்கின்றன.
உன் மயக்கங்களை மோதி நொறுக்கு.
உண்மையின் இதயத்துள்ளும்
ஏன்
அதன் நுரையீரல் கல்லீரல்
கொத்துக்களுக்குள்ளும்
உன் உயிர்ப்பை துடித்துக்காட்ட வேண்டும்.
எழு.தமிழா!
உன் எழுவாய் பயனிலை இலக்கணங்களே
உன் பீரங்கி வாய்கள்.
உமிழ்ந்தெழு.
பொய்மைப் புகைமூட்டங்கள்
சல்லி சல்லியாய்
பொடிந்து போகட்டும்.
சீறி எழு.
கணிப்பொறிகள் தீவுகள் அல்ல.
உன் பல கோடி வானங்கள்
அதில் தான் படுத்துக்கிடக்கின்றன.
உன் அறிவுக்கூர்மையின்
பொறிகள் தெறிக்கட்டும்.
சீறி எழு தமிழா!
மண்ணாங்கட்டிகள் அல்ல நீ.
சிந்தனைப்புயல்
எந்த மொட்டைவெளிகளிலிருந்தும் கூட
சூல் கொள்ளட்டும்
சுழற்று உன் எண்ணச்சுழிகளை.
சீறி எழு தமிழா!
சீறி எழு!
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக