நெற்றியடி
____________________________________________
"என் மேல் உருண்டுவிழுகின்ற
பாறாங்கல் அது"
வண்ணதாசன் அவர்களே...
(முக நூல் ...31.05.2026)
அந்த சிரிப்பு அவரது சிரிப்பு அல்ல.
மானிடா! உன் விதியைப்பற்றி நினை!
என்று இளிக்கிறது இறைவம்!
அந்த முதியவர் நோய்மையே
அதன் இப்போதைய "காஸ்ட்யூம்"
இப்படியெல்லாம்
விழுந்து நசுங்கிக்கூழாகத்தான்
ஆகிக்கொண்டிருக்கிறோம்
யுகங்களாக.
நோய்மை மட்டும் அல்ல எங்கோ எதிலோ
தொற்றிக்கொண்டிருக்கிறது ஒரு ஆதிக்கவெறி.
வாழ்க்கையின் அர்த்தம் எப்போதோ
இப்படி சிதறிப்போய்த்தான் கிடக்கிறது.
கேட்டால் நாலைந்து யுகங்களை
சமஸ்கிருதத்தில்
"சாளவாய்" குழறி
அந்த
இடியாப்ப நெளியல்களாய்
சித்திரம் ஆக்குவார்கள்.
பார்த்தீர்களா? பார்த்தீர்களா? என்று
அந்த ஜேம்ஸ்வெப் க்ரேஃபிக்ஸ்
குழம்பல் ஒளி இருளையும்
துணைக்கு அழைத்துக்கொள்வார்கள்.
ஏனெனில்
உலகத்துப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் கூட
ஒரு பிள்ளையார் சுழியைப்
போட்டுக்கொண்டு தான்
அதன் மீது உட்கார்ந்திருக்கின்றன.
மேக்ஸ்முல்லர் உபயம் இது.
போகட்டும்
அறியாமை அறிவுடைமை
விஞ்ஞானம் அஞ்ஞானம்
என்று
பிரம்மத்துக்கு
பட்டம் விட்டுக்கொண்டிருப்பதில்
எந்தப்பயனும் இல்லை.
நான் தான் கடவுளை
ஸ்லோகத்தின் எச்சில் ஒலியில்
படைக்கின்றேன் என்று
அவர்கள் கூப்பாடு போட்டு\
தன் காலில் எல்லோரையும்
மிதித்துக் கூளங்கள் ஆக்கினாலும்
இதோ எங்கள் தமிழ்சம்மட்டி அடி.
"ஜன்மாக்கள் கர்மாக்கள்" என்று
பீலா விட்டுக்கொண்டே
ஒரு மொட்டை விளையாட்டின்
உங்கள் "நபும்சக"த்தனங்களுக்கு
எல்லாம் ஒரு நெற்றியடி இது.
"பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே"
அவர்கள் கடவுள்களாக இருந்தாலும்
கீழே சாணிப்புழுக்களாக இருத்தாலும்
எங்கள் சம்மட்டி அடியில்
எல்லா இருட்டும்
தூள் தூள் தூளே தான்.
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக