திங்கள், 28 ஜூலை, 2025

"..........என்று தான் பேர்!"

 

"..........என்று தான் பேர்!"

_____________________________________



தமிழுக்கும் அமுது என்று பேர்!

நிறுத்து தமிழா!

புழுக்களாய் நெளிந்துகொண்டு

பொருளற்ற ஒரு "ஓட்டுப்புழுக்கத்தில்"

அடைந்து கொண்டு

எந்த தமிழை நீ

அறிந்தாய்?

எந்த புறப்பொருள் நெருப்பை

வீரமாக்கி உன் இருப்பை 

நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறாய்?

தமிழின் உரிப்பொருளும் கருப்பொருளும்

அறிவாயா?

உன் உரிமை 

தீப்பற்றிக்கொண்டிருக்கும் போது

எதற்கு இப்போது

"அட்டைக்கனவுகளுக்கு"

"அரட்டைத்தினவுகளுக்கு"

வரிந்துகட்டிக்கொண்டு

வாரிச்சுருட்டும் அலைகளாக‌

ஆர்ப்பரிக்கிறாய்?

ஆரியப்படை கடந்த அந்த‌

பாண்டியன் நெடுஞ்செழியனும்

தலையாலங்கானத்து நெடும்போரும்

உனக்கு வெறும்

பேல்பூரி பாணிப்பூரிகளாய்

நொறுக்குத்தீனிகள் ஆகிப்போயினவே!

உன் வரலாற்றை கசாப்பு பண்ணியவர்கள்

உன்னிடமே பிரியாணி ஆக்கி

கலர் கலர் கூச்சல்களில்

விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

உன் பிள்ளைகளுக்கு

பெயர் சூட்டுவதற்குக்கூட‌

அந்த சில்லறை இரைச்சல்களே

உன்னிடம் மொய்த்துக்கொண்டிருக்கின்றன.

சாதி வர்ணங்களே

உன்னை பலி கொள்ளும்

நச்சுப்புகையாய் போர்த்தியிருக்கின்றன.

மதங்களின் போதை "வஸ்துக்களே"

உன் அன்றாடக் கஞ்சாப்பொட்டலங்களாய்

உன்னைக் காவு வாங்கிக்கொண்டிருக்கின்றன.

எங்கு பார்த்தாலும்

ஈசல்களின் அடைசல்களாய்

நீ எங்கோ எதிலோ

அப்பிக்கொண்டு கிடக்கிறாய்.

கடவுள் என்றும்

சொர்க்கம் என்றும் 

வெறும் ஜிகினாக்காகிதம் சுற்றிய‌

"சாத்திரங்களில்" சருகுகளாய் 

குப்பைகளின் மக்கிய மேடுகளில்

இறைந்து கிடக்கின்றாய்.

உன் சரித்திரம் உனக்கு எந்த‌

தீயும் மூட்டவில்லை.

அறிவுப்பசியின் கிளர்ச்சியை

ஊட்டவில்லை.

நீ தொலைத்த உன் வெளிச்சம்

உனக்கு தடம் காட்டும் வரை

இந்த ஈசல் சிறகுகளாய்த்தான்

உதிர்ந்து கிடப்பாயா?

தமிழுக்கு அமுது என்று பேர் தான்.

அந்த சுடர்த்தேன்

அந்த உயிர்த்தேன்

உன் எரிமலைச்சிறகுகளில்

கொழுந்து விட்டு உயர்ந்திடும் 

ஓர்மை உன்னை

ஒட்டாத வரை

இந்த ஆதிக்கவிலங்குகள்

உன்னை உரசி உரசி 

ரணம் ஏற்படுத்திய வலியை

நீ உணராத வரை...

இங்கே உன் 

தமிழுக்கு 

வெறும் கூச்சல் என்று தான் பேர்!


_____________________________________________

சொற்கீரன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக