அந்த மின்னலாற்றங்கரையில்..
_____________________________________
"காதல் சிறகைக் காற்றினில் விரித்து"..
இந்தப்பாட்டு
இசையை ஆண்டு நின்ற
இனிமைப்பிழம்பு ஆட்சி செய்த
காலம் அது.
"பாலும் பழமும்"படத்தைப்பார்க்கும் போது
சரோஜாதேவி அவர்களே பாடியது போல்
ஒரு பிரமை.
அந்த பாட்டை வெளியே கேட்கும் போது
பி சுசீலா அவர்களே நடித்துக்கொண்டிருப்பதாய்
இன்னொரு பிரமை.
இசையமைப்பில்
கதை அமைப்பில்
இப்படியொரு கலைச்சங்கமம்
நிகழ்ந்திருப்பதை
இன்றைய கால கட்டங்களில்
உள்ள படங்களில் நாம்
உணர்ந்திருக்கவே முடியாது.
இசைக்கருவிகளின்
அற்புத கலவை மட்டுமே
நம் செவிகளில் நுழையும்.
உதடுகளின் விளிம்பில்
இசைக்க இயலாமல் வழுக்கி
விழுந்து விடுவதைத் தான் உணர்கிறோம்.
இந்த இரு கலைஞர்களும்
சமீபத்தில் தான் மறைந்து போனார்கள்.
ஆனால்
அவர்களின்
எதிரொலியும் எதிரொளியும்
நம் மன முகடுகளில்
இன்னும் முட்டி மோதி
உணர்வலைகளை எழுப்பிக்கொண்டே
இருக்கின்றன.
அந்த "வீடியோ"துண்டுகள்
பிரம்மாண்ட சிறகடிப்புகளாய்
நம் மீது பிம்பங்களை
பாயவிட்டு அந்த
அறுபதுகளின் மின்னலாற்றங்கரையில்
நம்மை உலா வரச் செய்து கொண்டிருக்கின்றன!
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக