எழுவாய் தமிழா!
_________________________________________
"பொல்லா நோய்க்கிடங்கொடேல்.."
என்று ஔவையார்
தூசி பறக்க புழுதி படர
பயணம் செய்து அல்லவா
விரட்டிக்கொண்டே போயிருக்கிறார்
அன்று.
"நோய் நாடி நோய் முதன் நாடி..."
என்று வள்ளுவர் தம்
நரம்புத்துடிப்புகளையே
எழுத்தாணியாக்கி
ஓலைகளில் வரி பிளந்திருக்கிறார்.
பண்டு எனும் நம் தமிழ்த் தொன்மையை
இன்னும் தொற்றிக்கொண்டு
நம் மூலை முடுக்குகளின் ஊர்களில்
வாழ்ந்த...வாழும் அந்த ஆதி குடிகள்
எனும் "பண்டுதர்கள்"தான்
நம் தமிழ்ச்சான்றாளர்கள்.
இந்த சான்றார்களை சண்டாளர்கள்
ஆக்கிய குள்ள நரிக்கூட்டங்களுக்கு
நம் பெருந்தமிழினம் எப்படி
இரையானது?
அதில் நம் இறையாண்மையும்
எப்படி இரையானது?
எங்கள் நெல்லைச்சீமையில்
அந்த பண்டுதர்களே ஊரின் "குடிமகன்"கள்.
அவர்கள்
மனிதனின் இறப்பிலிருந்து
பிறப்பு வாசலின்
பூட்டு சாவிகளை தேடி தேடி
சுவடி எழுதி வைத்தவர்கள்.
சுடலைக்காப்பகத்தின்
பெருமகனார்கள் அவர்களே.
அவர்களுக்கு அதற்கான உரிமத்தொகையை
"சுதந்திரம்" என்ற பெயரில் தான்
பெறுகிறார்கள்.
அத்தம் நண்ணும் அந்த பெருங்காட்டின்
நெருப்பையே
உயிரின் கருப்பையாக
தொடக்கம் செய்து
அறிவுத்தீ வளர்த்தவர்கள்.
நோய்களின் கிட்டங்கியில் தான்
அவர்கள் அந்த அறிவு நுட்பங்களை
"ஓலைச்சுவடிகளின்"
பல்கலைக்கழகங்களாய்
வைத்துக்கொண்டிருந்தனர்.
தமிழா!
இந்த அறிவின் அழ்நிலை மக்கள்
எப்படி
தடம்புரண்டு
அமுங்கிப்போயினர்?
ஆள்பவர்களின்
செல்ல மடியை
சிம்மாசனம் ஆக்கிக்கொண்ட
"சதுர் வர்ண"ச் சதிக்கும்பல்கள்
கைகளில் செங்கோல்கள்
சிக்கிக்கொண்ட பின்
கழு மரங்களில் உயிர் அறுந்து
போன தொல் தமிழர்கள்
எத்தனை எத்தனை கோடிகளோ
எவர் கண்டார்?
இதுவே
தமிழன் மீது போர்த்துக்கிடக்கும்
கொடுமையான பிணி!
தமிழா
உன் நோய் தீர்க்கும் மருந்து கூட
இந்த
தமிழ்! தமிழ்! தமிழ்!
தமிழ் தவிர வேறில்லை.
அறிவாய்!
எழுவாய்!எழுவாய்!
அதுவே உன் "பயன் நிலை"
அறிவாய் அறிவாய் தமிழா
அதனால் இன்றே
எழுவாய் எழுவாய் தமிழா நீ!
____________________________________
சொற்கீரன்
_____________________________________
28.07.25 அன்று
ஈரோடு தமிழனன்பன் அவர்கள்
எழுதிய கவிதையைப்பற்றிக்கொண்டு
எழுதிய கவிதை இது.
___________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக