ஞாயிறு, 13 ஜூலை, 2025

என்ன தரப்போகிறாய்? (ERODE TAMIZHANBAN)

 Erode Tamilanban

43 நி 
கிழக்கு
இன்ப இடுப்புவலியால்
துடிக்கிறது
இன்னும் கொஞ்சநேரத்தில்
விடியல் பிறந்துவிடும்
பூமிமுகம்
புன்னகை பொழியப்போகிறது.
கடல்கள்
அலைகளை எழுப்பி நீர்மவிழா
நிகழ்த்தக் கட்டளைபோட்டுவிட்டது
விடியல் என்பது
இரவின் மறுபக்கம் அல்ல
வெளிச்சம் என்பது
ஒளியின் அகங்கை!
புறம்பேசத் தெரியாத பகலிடம்
புறங்கை வழக்கம் எப்போதும்
இல்லை.
புறங்கை காட்டி வாழ்த்தும் மனிதன்
புதைகுழிமொழியின்
புலவனாகத்தான் இருப்பான்.
அழுக்குப்படாமல் வந்து
அழுக்குப் படாமல் திரும்பும்படி
வானம்
ஒவ்வோர் நாளும் பொழுதிடம் சொல்லித்தான்
அனுப்புகிறது.
பூமிக்கே
சுழன்றதுபோதும்
போதும் சுழற்சியை நிறுத்திவிடுவோம் என்றுதோன்றப்
பறவைகள் காரணமில்லை
கடல்வாழ் உயிரினம் காரணமில்லை இயற்கையை
நன்றியின்றிக் கொன்றுவதைக்கும்
மனிதனே காரணம்.
பொழுது
வைகறை வனப்பு முகம்காட்டி வருகிறது
அதுவே
அந்திஅகலும் நேரம்
ஆயிரம்கோடி நட்சத்திரப்பின்னல்
ஜடை அசைய
அற்புத இரவை அழைத்துவரப்
புறப்பட்டுப்போகிறது.
மனிதனே!
பிரிவுப்பரிசாக அதற்குஎன்னநீ தரப்போகிறாய்?
வாழ்நாள் எல்லாம் உன்னோடு இருக்கும் உயிர் புறப்படும்போது
பிரிவுப் பரிசாக அதற்கு என்னநீ
தரப்போகிறாய்?
என்ன தரப்போகிறாய்?-தலைப்பு
13-7-2025 இரவு -09-02-2025

________________________________________________________

சொற்கீரன்
சிவப்பு பூபாளங்கள்!
__________________________________________
எத்தனை காலமாக‌
இப்படி ஏமாறி அல்லது ஏமாற்றிக்கொண்டு
இருப்பாய்?
விடியல் என்பதும் அப்படி
"இன்று ரொக்கம் நாளை கடன்"
என்று எழுதப்பட்டு தொங்கும்
அட்டை தானே!
ரொக்கமும் கடனும் தான்
முகம் திருப்பி உட்கார்ந்து கொண்டிருக்கும்
நம் நவகிரக பொம்மைகள் என்பது
தெரியாதா?
விடியலும் சிவப்பு தான்.
அந்தியும் சிவப்பு தான்.
இந்த "ஏமாற்றுகளின் ஒற்றைப்புள்ளியிலா"
உன் ஒத்தையா ரெட்டையா விளையாட்டு?
விஞ்ஞான பூர்வமாகவும்
கொஞ்சம் அஞ்ஞான அலங்காரத்துடனும் தான்
அந்த "மனித சமுதாய சரித்திரங்களின்"
மேதைகளின் மேதை
சொல்லிவிட்டுப்போய்விட்டானே!
முரண்பாடுகளின் மாற்றமே மாறாதது என்று!
சும்மா சும்மா
இந்த பூமி சுழற்சியோடு
ஓடிப்பிடித்து விளையாடி என்ன பயன்?
சொற்களோடு சிந்தனைப்படிவங்களோடு
பொமரேனியன் குட்டிகளைப்போல்
இப்படி புரண்டு புரண்டு விளையாடுவதும்
நல்ல பொழுது போக்கு தான்.
நம் "ரப்பர் தமிழ்" ரிப்பன்களை கொண்டு
எலிவால் பின்னல்கள் இட்டு
இப்படி கிச்சு கிச்சு மூட்டிக்கொள்வதும்
நம் நரம்பு முறுக்கல்களுக்கு
சுளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
நெருப்பு என்றால் வாய் வெந்து விடுமா என்ன?
அந்த முட்டல் மோதல்களோடு
மோதித்தான் பார்ப்போமே!
அப்புறம் என்ன?
அந்த "சிவப்பு பூபாளத்துக்கு"
வீணைகள் உருவாக்கலாமே!
______________________________________________
சொற்கீரன்.
(13.07.2025ல் ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய ஒரு கவிதை நெருப்பில் கொஞ்சம்
குளிர்காய்ந்து எழுதியது இக்கவிதை)
_________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக