ஆணவக்கொலை.
_______________________________________
மொழி பெயர்த்துச்சொன்னாலும்
அப்படியே
ரத்தக்கவுச்சியோடு
சொன்னாலும்
வெறி வெறி தானே!
மனிதா!
அல்லது தமிழா!
சாதிச்சாக்கடையிலிருந்து
விலகி நின்று
காதலின்
"மென்காந்தள் விரல்"எனும்
குறுந்தொகை மணத்தை உன்னால்
நுகர்ந்து கொள்ளத்தெரியாதா?
உன் மீது
அந்த வெள்ளை மிருகங்கள்
அடித்த வர்ணத்தின்
வெறுப்புத்தீயை
அணைத்து
அந்த அநீதியையும் அவித்து
எப்போது வெல்லப்போகிறாய்?
மிடுக்காய் ஷர்ட் பேண்ட்
மற்றும்
கருங்குடை கவிழ்த்த
சிகை அலங்காரம் ...
எல்லாம்
இந்த ரத்தவாடையில் செய்தது தானா?
இளைய சமுதாயமே
நீ நடக்க இருக்கும் பாதையில்
எல்லாம்
இந்த கல்லறைகளை
கட்டிக்கொண்டா
உலா செல்லப்போகிறாய்?
உன் சிந்து வெளியும் கீழடியும்
அந்த ஆதிக்க சாணக்கியத்தில்
சில்லு சில்லுகளாகும்
அந்த "அபாயத்தை" உணரும்
சிந்தனையை
உணராத வரைக்கும்
பச்சைத்தமிழன் அல்ல நீ.
பச்சைபடுகொலையின்
இனவெறியன் தான் நீ.
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக