சனி, 5 ஜூலை, 2025

பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை...

பெரிய எழுத்து  விக்கிரமாதித்தன் கதை...

______________________________________________________



"துத்தநாகன்"  கதை

நன்றாகத்தான் இருக்கிறது.

பெரிய எழுத்து

விக்கிரமாதித்தன் கதையைப்போல.

எத்தனை நூற்றாண்டுகள்

அந்த பாறாங்கல் கனத்து

வேதாளங்களை

சமக்கிருத வாந்தி வக்கரிப்புகளோடு

நம் தோளில் சுமந்திருப்போம்?

அது பற்றி எந்த ஓர்மையும் இல்லாமல்

எச்சில் அசிங்கங்களை

பிச்சை வாங்கிக்கொண்டு...

தூ!

எதற்கு இன்னும் அந்த‌

புறநானூற்று புல்லரிப்புகள்?

ஆரியப்படை கடந்தான் என்ற‌

ஆறிப்போன 

"காப்பிய ஆற்றுப்படை"

அணிச்சொல்லாடல்கள்?

லட்சக்கணக்காய் நம் பிணங்கள்

இன்னும்

எலும்பு சதை ஊறுகாய்களாக

அந்த முள்ளிவாய்க்கால் படுகையில்

நாறிக்கொண்டு

புதைந்து கிடக்கும் அவலங்கள்?

இறையாண்மை இத்யாதி இத்யாதி

தூதரக சொல் அலங்காரங்கள்

நம் தமிழ் மூச்சை 

பிய்த்துப் பிய்த்துப்போட்ட‌

மிச்ச சொச்சங்களில் தான்

நம் சிந்து வெளியும் கீழடியும்

சின்னாபின்னமாகக் கிடக்கின்றன.

தமிழன் அகநானூறுகள் ஒப்பிக்கின்றான்.

ஆத்திச்சூடிகள் சத்தமாக படிக்கின்றான்.

மன எழுச்சியும்

சிந்தனைச்சீற்றமும் இல்லாமல் 

இன்னும்

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு

முகத்தில் காறி உமிழ்ந்ததை

துடைத்துப்போட்டுக்கொண்டு

கும்பாபிஷேக ஜல தெளிப்புகளில்

புளகாங்கிதம் அடைந்து கொண்டு...

என்ன எழுதி..

என்ன சொல்லி..

என்ன ஆகிவிடப்போகிறது...

தமிழ் வாழ்க!

தமிழ் வெல்க!!


__________________________________________________

சொற்கீரன்.

("துத்தநாகன்"  கதை என்று ஈரோடு தமிழன்பன் அவர்கள்

எழுதிய கவிதை தமிழனின் அவலங்கள் பற்றிய‌

நிகழ்வுகளையே துருத்திக்கொண்டு காட்டுகின்றன

என்பதே எனது இந்தக்கவிதை.)













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக