சனி, 24 நவம்பர், 2018

கமல் ரஜனி விஜய்யின் "மைக்குகள் "தேசம்.

கமல் ரஜனி விஜய்யின் "மைக்குகள் "தேசம்.
====================================================ருத்ரா

"ட்விங்கிள் ட்விங்கிள் ஜிகினா ஸ்டார்ஸ்"

ஆங்கில மழலைகள்
ஆகாயத்தைப்பார்த்து
தங்கள் கனவுகளை
உயர உயர
இந்த"ரைம்"மில்
தூக்கி வீசும்.
தமிழ்நாட்டின் அவலங்களின்
உச்சம் என்ன வென்றால்
இவர்கள்
சினிமா என்னும்
ஜிகினா உலகத்திலிருந்து தான்
தங்கள் விடியலை
கீறிப்பார்க்கத் துடிக்கிறார்கள்.
இருளைக்கிழித்து
மீண்டும் மீண்டும்
இருளையே தான்
கண்டுகொண்டிருக்கிறார்கள்.
தங்கள் தங்கள் முகங்களின்
அடையாளத்தை
அவர்கள்
காணமுடியாமல்
அந்த சினிமா இருட்டு
ஒரு புற்று நோயாய்
அவர்களை தின்று கொண்டிருக்கிறது.

நாற்காலியைப்பிடிக்க‌
சினிமாசாராயத்தைக்காய்ச்சி
மக்களுக்கு
கொஞ்சம் கொஞ்சமாக‌
புகட்டினால் போதும்.
அதைத்தான்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக‌
ஓட்டு கேட்டவர்கள்
கொட்டு முழக்கினார்கள்.
அரசியல் என்றால் சித்தாந்தம்
என்பது
மாறிப்போய் விட்டது.
சித்தாந்தம் என்று எதுவும்
இல்லாத "சூன்யத்தை"
அரசியல் ஆக்கினார்கள்.
லஞ்சம் ஊழல் எனும்
நம் மரபணுக்கள்
நம்மையே அந்த "ஹல்க்"எனும்
ராட்சத மனிதர்களாய்
ஆக்கி விட்டது.

வார்தாப்புயல் ஒக்கிப்புயல்
கஜாப்புயல்
என்று ஒவ்வொரு புயலும்
தமிழன் புலம்பிக்கொண்டே
இருக்கும் ஒரு பிச்சைக்காரன் மட்டுமே
என்ற
அசிங்கமான உண்மையை
தோலுரித்துக்காட்டிக்கொண்டிருக்கிறது.


இவன் புலம்பலுக்கு
கொஞ்சம் பருக்கைகள் வீசிவிட்டு
மொத்த வளத்தையும்
சுருட்டி ஏப்பம் விடும் கலையை
கற்றுத்தேர்ந்து விட்டார்கள்.
இந்தப்புயல் கூட‌
தேர்தல் தேதியை மறைமுகமாக‌
அறிவித்துவிட்டதைப்போல் தான்
வாக்குகளை
எவ்வளவு அள்ளலாம்
என்று நிவாரண நிதிக்கணக்கெடுப்பில்
புள்ளிவிவரங்களை
அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டாட்சி தத்துவம் என்றைக்கோ
உயிர் வற்றிய
எலும்புக்கூடு ஆகிவிட்டது.
அதனால் சுயாட்சியும்
பேச்சு மூச்சு இழந்து விட்டது.
ஏதோ ஒரு "பாசிசப்புயல்"
"இந்து"மாக்கடலில்
மையம் கொண்டிருப்பதை
அறியாத அந்துப்பூச்சிகளாய்த்தான்
மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்
வாக்குகளை கொத்து கொத்தாக‌
அள்ளிக்கொள்ளும்
மீன்பிடிக்கும்
விசைப்படகுகளாக‌
முழு சூப்பர்ஸ்டார்களும்
மற்றும்
முக்கால், அரை, கால்,
மற்றும் காலே அரைக்கால்
சூப்பர்ஸ்டார்களும்
அணி வகுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கமல் ரஜனி விஜய்யின் "மைக்குகள் "தேசம்
சினிமா கட் அவுட்டுகளைக்கொண்டா
முட்டுக்கொடுக்கப்போகிறது?

எப்படிப்பார்த்தாலும்
நம் சித்தாந்தம்
தமிழும் திராவிடமும் தான்.
சித்தத்தை இழந்துபோன நிலையில்
இந்த குத்தாட்டங்களும்
வெத்தாட்டங்களுமே
நமக்கு குட்காப்பொட்டலங்கள்.
மனிதனை மனிதன்
சுரண்டும்
இந்த வன்கொடுமை
நம்மை காயப்படுத்தவில்லை.
அந்த உள்ரணம் நமக்கு
இன்னும் உறைக்கவில்லையே!
அது கலர் கலரான சாதி மத‌
லேசர் ஒளியைக்காட்டி
நம்மை மரத்துப்போக
வைத்துக்கொண்டிருக்கிறது.
பொதுமை மனித சம நீதி
என்னும் தராசுத்தட்டுகள்
எங்கோ கடலில் வீசப்பட்டுவிட்டன.
இயற்கைச்சீற்றம்
நம்மை கம்பீரமானமான‌
அரசியல் புயல் ஆக்குவேண்டுமே ஒழிய‌
ஓட்டுக்கு என்ன தருவார்கள்
என்ற ஒரு அடிமை சாசனம்
நம்மை மண்ணோடு மண்ணாய்
புதைத்து விடக்கூடாது.
வருமானம்
உருவாக்கும் கைகள் தான்
உருவாக்கப்பட வேண்டும்.
யானையின் துதிக்கை போல‌
துதிக்கும் கைகள் தேவையில்லை.
இந்த யானையின் பலம் தெரியவேண்டும்
என்று தான்
அந்த (கஜா) யானை
பிளிறிக்கொண்டு வந்து நிற்கிறது.
"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா"
சினிமாவில் ஒலித்தாலும்
இது சினிமா அல்ல.
சிலிர்க்கும் நம் உள்ளுணர்வு.

"என்று தணியும் இந்த தாகம்?"
ஆம்.
விடுதலை என்று
இந்த கானல் நீரை அல்லவா
அள்ளி அள்ளிக்
குடித்துக்கொண்டிருக்கிறோம்.

=======================================================













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக