ஞாயிறு, 4 நவம்பர், 2018

முணு முணுப்புகளாய்....

முணு முணுப்புகளாய்....
=============================================ருத்ரா

படிக்கவேண்டாம்
இது கவிதை.

இதயம் சில்லு சில்லுகளாய்
உடைந்த போதும்
அதன் ஒவ்வொரு கோணத்தையும்
திருப்பி திருப்பி
கலர் காக்டெயில் கனவுகளை
கண்களில் பதியவிடும்
இடுக்குகள் நிறைந்த‌
அடுக்குகள் அடர்ந்த வனப்பகுதி
கவிதை.

கையில் காசு வாயில் தோசை
என்று பழக்கப்பட்ட‌
வியாபார நெடிகளுக்கு
எத்தனையோ ஒளியாண்டுகள்
விலகி நிற்கும்
ஒளித்திட்டுகள்
கவிதை.

கற்பனை விண்கோள்
ஒளிவேகத்தையே முறித்துப்போகும்
கூர்வேகம் உடையது
கவிதை.

அப்புறமும்
மொக்கை என்று
உதடு பிதுக்குவீர்கள்.
கவிதைத்தீ
பனிக்கண்டத்தையும்
உப்புக்கண்டம் போட்டு
உள்ளத்துக்குள்
கூறு கட்டும்.

குத்தாட்ட ஜிகினாக்களின்
புழுதி மண்டலம்
இங்கே
புறமுதுகிட்டு ஓடிவிடும்.

பிள்ளையார் காப்பு முதல்
செப்பு வைத்து வரிசையாய்
செய்யும்
வார்த்தைகளின் சின்ன விளையாட்டு
அல்ல கவிதை.

இதற்கு வாசல் தாழ்வாரம்
பூஜை அறை
படுக்கை அறை
அடுப்பாங்கறை
புழக்கடை
என்ற வரிசையெல்லாம்
கிடையாது.
நுழையும்போதே
நமக்கான பாடை கொள்ளிச்சட்டி
சங்கு சேகண்டி
எல்லாம் தயார்தானா?
என்று நோட்டம் இடுவது தான்
இந்த காகிதங்களின் சரசரப்புகளில்
கேட்கின்றது.
வாழ்க்கை என்ற‌
அர்த்தம் தொலைந்து போன சொல்லுக்கு
பதவுரையும் பொழிப்புரையும்
கோவிலில் இருப்பதாய் சொல்லி
சொல்லி...சொல்லி சொல்லி..
எதிரொலி மட்டுமே நிறைய‌
இங்கு அடைத்துக்கொண்டிருக்கிறது
வௌவ்வால் புழுக்கைகளோடு.
உனக்குள்
பழைய கும்ம்மிட்டி அடுப்புகள்
குமைகிறதா?

பாழடைந்த சுவர்
இடுக்குகளில் போய்
வாழ்க்கையின்
பிரகாச இடிமின்னல்களை
தேடி ஏமாந்த‌
அதிர்ச்சிகள் இன்னும்
அடி ஆழத்தில்
நசுக்கிப்பிழிந்து கொண்டிருக்கிறதா?

காதலும் போதை.
கடவுளும் போதை.
மனிதம் எனும்
மையம் கழன்ற சுழற்புயலின்
மனமுறிவுகள்
எங்கணும் எங்கணும் எங்கணும்....
வண்ண வண்ண
லேசர் ஒளிப்பிழியல்களில்
தொலைக்காட்சிகளாய்
தொல்லைப்படுத்துகின்றன.
தேடல் தேடல் என்று
பெருமூச்சுகளை
சிறு மூச்சுகள் தேட‌
அந்த கீற்று மூச்சுகளும்
சில்லிட்டு மூடிக்கொள்கின்றன.
டி.எஸ் எலியட்
இப்படி முடிக்கின்றான்.
இதோ இந்த உலகம் முடியப்போகிறது.
ஆம்.
இதோ முடியப்போகிறது.
இதோ முடியப்போகிறது.
பெரிய ஓசைகளாய் அல்ல.
வெறும்
முணு முணுப்புகளாய்.
முணு முணுப்புகள் கூட‌
அதோ
அடியில் புதைந்த
அகழ்வாராய்ச்சி எலும்புத்துண்டுகளாக..

=====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக