ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஒரு குழந்தை பிறக்கிறது..

ஒரு குழந்தை பிறக்கிறது..
======================================ருத்ரா இ.பரமசிவன்.


தாய் வயிறு கிழிந்து
இப்போது தான் வந்தேன்.
அவள் மூச்சுகள் எனும்
வைரக்கம்பிகள்
வைத்து நெய்த சன்னல் பார்த்து
கனவுகள் கோர்த்தபின்
அவள் அடிவயிற்றுப்
பொன்னின் நீழிதழ்
அவிழ்ந்த கிழிசலில்
வந்து விட்டேன் வெளியே!

நீல வானம் கண்டு வியப்புகள் இல்லை.
சூரியசெப்புகளும் கொண்டு
விளையாட மனம் வரவில்லை.
வண்ணத்துப்பூச்சிகள்
சிமிட்டும் சிறகில்
வண்ணங்கள் ஏதும் உதிர்ந்திட வில்லை.
பூக்கள் எனக்கு
புன்னகை சொல்ல
வந்தன என்றார்.
புன்னகைக்குள் ஒரு
இருண்ட நீள் குகை
எப்படி வந்தது?
மான் குட்டிகள் மந்தை மந்தையாய்
மனதை அள்ளும் என்றார்.
மண்பொம்மைகளாய் அவை
யாவும் கரைந்து மறைந்தே போயின.
அடி வான விளிம்போரம்
தொடு வான இதழோரம்
சன்னமாய் ஒரு கேவல் ஒலியின்
கீற்று என்னை அறுப்பது
உணர்ந்தேன்.
என் தாயின் இதயச்சுவர்களில்
பாயும் குருதியில்
வலியின் குதிரைகள்
விறைத்து எகிறும்
காட்சிகள் கண்டேன்.
அழகாய் பூத்த அவள்
தாமரைச்சிரிப்பிலும்
மறைந்த ஓர் மெல்லிழை
கோடி கோடி உலகங்களின்
கனங்கொண்ட சோகமாய்
அழுகையின் லாவா
அடங்கித்தேய்ந்து
அவள் கருப்பைக்குள்ளேயே
கருங்கடலாய் உறைவது உணர்ந்தேன்.
பிரம்ம வாசலில்
பெண் ஒரு கேவலம்!
அவள் கதவு திறந்து
வெளிச்சம் காட்டும் உயிரொளி கூட‌
கேவலம் கேவலம்.
முக்தியும் நாசம் அதன்
பக்தியும் நாசம்
என்றொரு
மூளிக்குரல் மூள எரியும்
பிணத்தீ மூட்டிய‌
வேள்விகள் கொண்டா..ஞானக்
கேள்விகள் வளர்த்தீர்!
வெற்றுச்சுவடிகள் எரியட்டும்!
என் விடியல் அங்கு பூக்கட்டும்!
அப்போதே நான் ஒரு பூம்புயல்.
புறப்பட்டு வருவேன்
புதிய தோர் காலம் படைத்திடுவேன்.

======================================================
14.09.2016
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக