புதன், 21 நவம்பர், 2018

காற்றின் மொழி "ஜோதிகா" (2)

காற்றின் மொழி "ஜோதிகா" (2)
====================================================ருத்ரா

பட்டம் பெற்றவர்களின்
தம்பட்ட இரைச்சல்களிடையேயும்
பட்டாம்பூச்சியாய்
வலம் வந்து திரைக்கதையையே
ஒரு கலக்கு கலக்கி விட்டார்
ஜோதிகா.
வரலட்சுமியின் நடிப்பும்
இவரது நடிப்பின் வெளிச்சத்தில்
இரண்டு மூன்று அங்குலங்கள்
முன்னேறியுள்ளன.
வீட்டில் குடும்பப்பணிகளில்
ஒரு கஜாப்புயலை
சிறை வைக்க முடியுமா என்ன?
ஏற்கனவே
சந்திரமுகி படத்தில்
அந்த "லக லக லக"வும்
அதற்கு உருட்டும் விழிகளும்
திகில் மூட்டும் இதழ்விரிப்புகளும்
முக அதிர்வுகளில்
ஒரு பேய்த்தனமும் காட்டி
"சைக்கோ"மொழியை
திறம்பட காட்டிய ஜோதிகாவை
நாம் மறக்க முடியாது.
அந்த நடிப்பினால்
ஜோதிகாவை "லேடி ரஜனி"என்றோ
அல்லது
ரஜனியை ஒரு "ஆண் ஜோதிகா"வாகவோ தான்
மார்ஃபிங் செய்து ரசிக்க முடிந்தது.
காற்றின் மொழியில் அவர்
அந்த மைக்குக்குள் ஊடுருவி
"ஹலோ" என்று ஒலித்ததும்
திருவிளையாடல் படத்தில் உள்ளது போல்
எல்லா தென்னைமரங்களும்
பறவைகளும்
உறைந்து உறைந்து போய்
உயிர்த்தன.
ரேடியோ ஜாக்கியாய்
எல்லோரையும்
ஒரு மின்னல் கயிற்றால்
கட்டிப்போட்டு விட்டார்.
அன்றைய பானுமதி அவர்களின்
வெடுக் நடிப்பில்
ஒரு துடுக் ந‌டிப்பைச்சேர்த்து
ஒரு சிகரத்தைத்தொட்டுவிட்டார்.
மற்ற கூழாங்கற்களின் சரசரப்பிலும்
இந்த "ஜோதி இமயம்"
சுருதி கூட்டி படம் முழுதும்
ஒரு வெளிச்சப்பிரளயத்தை
விலாவரியாய் காட்டி நின்றது.
ஒலி அலைகளின் பிசிறுகளுக்குள்ளும்
ஒரு இலக்கியம் பாய்ச்சினார்.
தன் தொண்டையின் தசைநார்களில்
அந்தக் (மின்)காந்தக்குரலால் அவர் மீட்டியது
சீறியாழா?
பேரியாழா?
செங்கோட்டு யாழா?
மகர யாழா?
யாழிலக்கணத்தின் யாப்பிலக்கணம்
அறிந்த மொழிஆராய்ச்சியாளர்கள்
அதை அலசி ஆராயட்டும்.
ஏனெனில்
அது காற்றின் "மொழி" அல்லவா?

====================================================================








1 கருத்து:

vimalanperali சொன்னது…

நல்ல விமர்சனம்!

கருத்துரையிடுக