திங்கள், 12 நவம்பர், 2018

ரஜனியும் அந்த ஏழு மராமரங்களும்.

ரஜனியும் அந்த ஏழு மராமரங்களும்.
=============================================ருத்ரா

அந்த ஏழு தமிழர்களின்
நிலையே
இப்போது அந்த ஏழுமராமரங்கள்.

அரசியலின் போலி ராமர்கள்
தமிழ் நாட்டையே ராவண தேசமாக‌
அடையாளம் செய்து கொண்டு
குறி பார்த்து எய்யும்
அவர்களின் அம்புகளுக்கு
தாக்குதல் களமாகிப் போன‌
மராமரங்கள் இவை.
இந்த தமிழன் அந்த தமிழன்
என்று
எல்லா தமிழன்களும்
தங்களையே துரோகக்கூட்டம்
ஆக்கிவிட்ட பிறகு
எந்த தமிழனுக்கும்
"தலை நிமிர்ந்து நில்லடா"
எனும் பாட்டை ஒலிக்கமுடியாமல்
தலைகளை
எதிலோ புதைத்துக்கொண்டார்கள்
என்ற சுடும் உண்மையை
காட்டும் மராமரங்கள் இவை.
மறைந்திருந்து எய்ய வேண்டிய‌
அச்சம் எதுவும் இல்லாமல்
இந்த மராமரங்களில்
அரசியல் நடத்தும் இந்த அவமானங்களின்
நிழல்கள் எங்கிருந்து நீண்டன?
அமெரிக்காவையும்  சீனாவையும்
அசைபோட்டுக்கொண்டே
உச்சரிக்கும் ஷரத்துக்களில்
உருவாக்கிய ஒரு இறையாண்மைக்கு
உயிருக்கும் மேலான  செம்மொழித்தமிழை
பலி ஆக்கும்
அவர்கள் சாணக்கியத்தை
வெல்லும் வழியின்றி தவிக்கும்
இந்த தமிழர்களின் அவலங்கள்
என்று தீருமோ?
எதிலே நாம் புதைந்து கொண்டோம்?
இலவசங்களிலா?
குத்தாட்ட சினிமாக்களிலா?
சாதிவெறிகளின் நீள நீளமான அரிவாள்களிலா?
அறியாமையின் அபினியை
மதமாக்கி சாஸ்திரங்களாக்கி ஸ்லோகங்களாக்கி
நம்மைச்சுற்றி இறுக்கும்
அனக்கொண்டா பாம்புகளிலா?
அரசியல் அறிவின் கூர்மை
மழுங்கடிக்கப்பட்ட
நம் மடமைகளிலா?
உங்களுக்கு சினம் வரலாம்.
ஆனால் "ரஜனி" எனும்
நம் நாளைய முதலமைச்சரின்
வசனங்களைக்கவனியுங்கள்.
"யார் அந்த ஏழு பேர்?"
தெரியாதாம்.
இனிமேல் தான் இங்கே பறக்கும்
காக்கைகளையும்
துப்பாக்கிச்சூட்டில் செத்து விழும்
குருவிகளையும் பற்றி
அறிந்து கொள்ளப்போகிறாராம்.
மூளையெல்லாம் களிமண் அவர்க்கில்லை.
அதைக்கேட்டு புளகாங்கிதம் அடைந்து
ஓட்டுப்போட தயாராய் இருக்கும்
நமக்கே தான்.

========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக