வெள்ளி, 2 நவம்பர், 2018

கடவுளே...

கடவுளே...
=================================================ருத்ரா

"கடவுளே
கோடி கோடியாய்
இந்த பங்கு வணிகம்
எனக்கு
கூரையைப்பிய்த்து
கொட்டவேண்டும்.
எனக்கு தரும் இந்த‌
"கனக தாரா"வுக்கு
உனக்கு நான்
பால் அபிஷேகம் செய்வேன்."
அவர் பூஜையை முடித்துக்கொண்டு
கூடத்தில்
மெத்து இருக்கையில் அமர்ந்தார்.
தொலைபேசி அழைத்தது
செவிமடுத்தார்.
"சார் இன்று ஷேர் மார்க்கெட்டில்
புள்ளி பத்தாயிரத்து ஐநூறைத்
தாண்டி விட்டது.
இன்றைய லாபம்
உங்களுக்கு நாலரை கோடி..."
"ஆ..ஆ.ஆ.."
அவர் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு
சாய்ந்தார்.
.............
அவர் கடவுள் ஆனார்.
கழுத்து நிறைய ரோஜாமாலைகள்.
சுற்றிக்கூட்டம்.
அழுகையும் கண்ணீரும்
எல்லோருடைய நெஞ்சையும் பிழிந்தது.

தலை மாட்டில்
காமாட்சி விளக்கின் சுடர்
தூண்டிற்புழுவைப்போல் துடித்தது.
அவர் அருகே ஊதுவத்தி
புகைவரியில்
எதையோ எழுதிக்கொண்டே இருந்தது.

"இந்த சின்ன சந்தோஷம்
உன்னை ஒடித்துப்போட்டு விட்டதே.
கடவுள் எனும் நான்
கோடி கோடி....கோடி
(உன் கணிதம் தோற்றுவிடும் அளவுக்கு
அத்தனை பிரபஞ்சங்கள்)
...கொடி பிரபஞ்சங்களைக்கொண்டு
சுழற்றி சென்டிரிஃப்யூகல் விசையில்
செய்து வைத்த‌
இனிப்பின் பிழம்பால் ஆன‌
பஞ்சுமிட்டாய்.
இதை ப்ரம்மம் எனும்
ஒரே சொல்லில் வழிய வழிய‌
ருசிக்க முனைந்தவர்கள்
ஆவியாகிப்போனார்கள்.
இந்த சின்ன ஆரஞ்சுமிட்டாய்க்கு
பலியாகி விட்டாயே.
நீ என்னை வணங்குவதை விட‌
நீ என்னை அறிய முயல்.
அதோ பார்
"நாசா"எனும்
உன் விஞ்ஞானம் அந்த‌
சூரியப்பழத்தையே சுவைக்க முயன்று
சுற்றிக்கொண்டிருக்கிறது.
என்னை நீ தான் கற்பனையாய்
உருவாக்கினாய்.
என்னை உன்னால் எப்படி
கற்பனை செய்ய முடிந்தது என்று
நான் இப்போது அடைந்து கொண்டிருக்கும்
சந்தோஷமும் வியப்பும்
என்னையும் விட மிக மிகப்பெரிது.
கடவுள் என்பது
உனக்கு வெறும் சொல்.
அதனைக்கடந்து அந்த அறிவில் நுழைந்து வா.
நீயே நம்பிக்கொண்டிருக்கிறாயே
உனக்கு அடுத்த பிறவி உண்டு என்று.
ஆம்
பிறந்து வா.
ஆத்திகனாய் அல்ல.
ஒரு நாத்திகனாய் வா.
அப்போது தான்
இதைவிட ஒரு பெரிய கடவுளை
நீ தேடுவாய்.
எனக்கும் அவனை பார்க்க மிக மிக ஆவல்
உன் மூலமாய்!
அதோ உன் மகள் வயிற்றுப்பேத்திக்கு
பிரசவ வலி
உனக்கு ஒரு வாசல் திறந்து கொண்டிருக்கிறது.

===================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக