ஒரு நினைவு
=============================================ருத்ரா
A Memory
by
Lola Ridge
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..
அந்த தென்னைகளின் தீ உதிரும் உரசல்கள்..
கீற்றுகளின் வழியே எதை ஊற்றுகின்றன?
நகரமே வெள்ளையாய் மொட்டை அடித்துக்கொண்ட
உச்சி முற்றங்களில்..அந்த
முலாம் பூச்சு எனக்குள் மூச்சு முட்டுகிறது
அற்புத சுகமாய்.
.
நிலவின் ஒளித்திவலைகள் இந்த பரப்பின் மீது
முத்தமிடத்துடிக்கும்
பிரபஞ்ச உதடுகளாய் அலைவுறுகின்றனவே!
எரிக்கும் கந்தக மெத்தையா அது?
உணர்வுகளில் பற்றியெறிய அந்த கடற்கரையில்
உட்கார்ந்து தான் இருந்தோம்.
கனவுகள் நெடுங்கிடையாய் எங்களை கிடத்திவிட
எங்கள் இடைவெளியில்
இந்த இரவு நசுங்கிக்கிடக்கிறது...
நிலவெனும் அந்த தங்க மாங்கனி
உயரே உயரே..
ஒரு விந்தை புரிகிறது.
காற்றின் குளிர்ச்சித்தூவல்கள்
மோனப்பூவின் மகரந்தங்களில்
எங்கள் முகங்கள்மேல் அப்பிக்கொள்கிறது
இதயப்படலமாய்!
கதகதப்பாய் அந்த பிஞ்சு மழலையின்
நறுமணம் ...
ஒரு "செங்கடல் பிளக்கிறது".
இதழ்களின் இடுக்கில்
உயிர்ச்சொற்களின் பெருக்கம்
இனம் புரியாத இன்பத்தின் சுநாமி.
தலை கால் தெரியாமல் துள்ளுகிறதே
இந்தக்கடல்!
நாவற்கனியின் இனிப்பு வண்ணம்
நாவில் பிழிந்து நிற்பதுபோல்
இந்தக்கரையெல்லாம் ஒரு வியப்பு..
தழுவி தழுவி நழுவியோடும் கடலே!
முகம் காட்டி காட்டி
புறமுதுகும் காட்டி ஓடுகிறாயே நீ!
எப்போதுமே
இந்த முகமும் முதுகும் தான்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உயிர் "ஈரும்"விளையாட்டு...
எங்களுக்கும் எப்போதும்!
அண்டத்தை பாதி விண்டுவைத்த
இந்த இரவுப்பொழுது போதுமா?
இதன் நீண்ட நரம்புகளில்
எத்தனை கோடி அண்டங்கள்
"கொடி"சுற்றிக்கிடக்கின்றன தெரியுமா?
நிலாவின் பாதை
வெள்ளி அரைஞாண் கொடிபோல்
இழைந்து கிடக்கும்
கடக மகர ரேகைகளாய்
கடலின் கடைதெடுத்த வெண்ணை உடம்பை
அலங்கரிக்கின்றன.
அப்படி அலங்கரிப்பது
என் அந்த நினைவுகளே!
அவை எப்படி வருகின்றன பாருங்கள்!
இந்த மொத்த இரவுமே
என்னை மூடிக்கொண்டு
உன்மத்தம் பிடிக்கவைக்கிறது..
இன்னும்
கையில் அகப்படாத
மெல்லிய அல்லி போல்
அது போக்கு காட்டுகிறது!
______________________________________________________
பின்குறிப்பு :
சொற்களின் மீது சொற்கள்
ஏறி மிதித்துக்கொண்டு
அர்த்தப்படுத்தும் "சிரச்சேதத்தை"
மொழி பெயர்ப்பு என்னும் பெயரில்
நான் இங்கு எழுதவில்லை.
சொற்களின் இடையே பிதுங்கி வழியும்
மொழியின் "உயிர்ப்பை"மட்டுமே
உலவ விட்டிருக்கிறேன்.
______________________________________________________ருத்ரா
19.04.2015
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக