ஜனநாயகத்தின் சிலை
============================================ருத்ரா
ஜனநாயக சிற்பிகளே
சுத்தியலும் உளியும்
உங்கள் கையில்.
எதை செதுக்குவது?
எப்படி செதுக்குவது? என்று
எழுபத்தியொரு ஆண்டுகளாக
யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
உருவமே பிடிபடாமல்
சும்மா சும்மா
அம்மி கொத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
இடையில்
சினிமா நடிகர்கள்
உங்கள் செங்கோலைப்
பறித்துக்கொண்டார்கள்.
பிச்சை போடுவது போல்
சில வசதிகள் கொடுத்ததால்
உங்களை
நிரந்தர பிச்சைக்காரர்கள்
ஆக்கிவிட்டார்கள்.
இன்னும்
ஜிகினா உலகத்திலிருந்து
வருகிறார்கள்.
லஞ்சம் ஊழல் இவற்றின்
உங்கள் நிழல் தான்
இந்த நாட்டில் பேயாய்
அப்பிக்கிடக்க்கிறது.
சூ!மந்திரக்காளி!
எங்கள் நற்பணி மன்றங்கள்
களத்தில் குதித்துவிட்டால்
இனி எல்லாம்
தேனாறு! பாலாறு தான்!
என்று
பஞ்ச் வசனங்கள்
பஞ்சு மிட்டாய் மேகங்கள் போல்
வானத்தில் மிதக்கின்றன.
வழக்கமானவை வெறும் பிசாசுகள்
என்றால்
வருபவை வெறும்
சோப்புக்குமிழிகள் தானே.
தினமும் சினிமாவின்
குத்தாட்டங்கள் தானே உன்
தோட்டங்கள்!
லஞ்சமும் ஊழலும் கூட
உன் வீட்டு முற்றங்களின்
குரோட்டன் செடிகளாய்
அலங்காரம் காட்டுகின்றனவே.
பட்டினி கிடக்கிறவன்
பட்டினி கிடக்கிறான்.
முரண்பாடுகளின்
பொருள்முதல் வாதம்
முரண்பாடுகளாகவே
உன்னைச் சங்கிலியில்
மாட்டியிருப்பதை என்று
நீ உணர்வாய்?
இந்த இருட்டுகளை கிழித்தெறியும்
வரிகள் அடங்கிய
அந்த "மூலதனம்" எனும் நூல்
உன்னைப் புரட்டிப்போட்டு விடும்.
அப்போது புரியும்
நீ இந்த நாட்டின் மூலாதாரங்களின்
பொங்குமாங்கடல் என்று.
உழைக்கும்
உன் ஒற்றை வியர்வைத்துளியில்
இந்த உலகத்தையே
ஒரு சுற்றுலாக் கப்பலாய்
பத்திரமாக மிதக்க விடலாம்.
ஆனாலும் இப்போது
நீயே செதுக்கிய உன்
"ஓட்டு" உருவத்தைப்பார்.
சுயநலமும் பேராசையும்
ஒன்றாய்ப்பிசைந்த
இந்த "வார்ப்புகளை"
உலவ விட்டது எது? அல்லது யார்?
இந்த விளம்பரயுகமும்
கார்ப்பரேட் காடுகளும்
உன்னை பிண்டம் பிடிக்கின்றன.
நீ செதுக்கிய உன் சிலையைப்பார்.
இரண்டுகைகளிலும்
திருவோடு தாங்க
அதில்
விட்டெறிவதை விட்டெறியுங்கள்
என்று கூனி குறுகி
நிற்பது தெரிகிறதா?
சிலைக்கு சாதி மதங்களின்
சாந்துபூச்சு.
அழியாத நான்கு வர்ணத்தில்
அக்ரிலிக் எமல்ஷன்!
முதலில் உன்னை .உற்றுப்பார்.
உடைத்து நொறுக்கு இந்த சிலையை.
உதயம் ஆகும்
உன் பொன் விடியல்!
========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக